ADDED : ஆக 27, 2026 08:51 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப்பள்ளியில் 6 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி மற்றும் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பொறுப்பு இயக்குநர் ருக்குமணி பங்கேற்று மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
குளுனி இல்லத்தலைவி செலின், பள்ளியின் முதல்வர் ரோசிலி மற்றும் துணை முதல்வர் மெர்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், புவியியல், வரலாறு, தமிழ், பிரெஞ்சு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் தங்களது புதுமையான மாதிரிகளை
காட்சிப்படுத்தினர்.
தமிழர்களின் பாரம்பரியம், விவசாயத்தின் முக்கியத்துவம், மன்னர்கள் நீதி வழங்கும் முறை, செயற்கை நுண்ணறிவு முக அங்கீகாரம், செயற்கை நுண்ணறிவு மூலம் கழிவுகளை பிரித்தல், தானியங்கி வீடு, மழைநீர் சேகரிப்பு, காற்று சுத்திகரிப்பு, சந்திரயான்-3, எரிமலை வெடிப்பு, யானை பற்பசை சோதனை உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
ஹரப்பா மற்றும் எகிப்திய நாகரிகங்கள், பிரெஞ்சுப் புரட்சி, மவுரியப் பேரராசு போன்ற வரலாற்று தலைப்புகளில் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மாணவர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை பாராட்டினர்.
