ADDED : ஆக 27, 2026 09:03 PM
பாகூர்: புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், கிருமாம்பாக்கத்தில் சாலையோர பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், மாசுக்கட்டுப்பாட்டு குழு சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பசுமை புதுச்சேரி இயக்கத்தின் சாலையோர மர நடவு திட்டத்தின் கீழ், 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கிருமாம்பாக்கத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பி.எஸ்.என்.எல்., நிறுவன துணை பொது மேலாளர் ரோஸ்லின் ராஜகுமாரி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பி.எஸ்.என்.எல்., உதவி பொது மேலாளர் கல்பனா கிராந்தி நன்றி கூறினார். மகுடம், மரமல்லி, சரக்கொன்றை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், பி.எஸ்.என்.எல்., மற்றும் கிருமாம்பாக்கம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
இந்த மரக்கன்றுகள் புவியிடக் குறியீடு முறையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் வளர்ச்சி மற்றும் உயிர் வாழ்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.
இப்பணிகளை, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுவின் திட்ட அலுவலர்கள் இளங்கோ, சாந்தலட்சுமி, தினேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவையொட்டி, மரக்கன்றுகளை நட்டவர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு வழங்கப்பட்டது.
