UPDATED : நவ 14, 2026 12:18 AM
ADDED : நவ 14, 2026 12:16 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக சொகுசு கப்பல் மூலம் கடல் பயணம் வரும் 20ம் தேதி அறிமுகமாகிறது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், புதுச்சேரியில் முதல் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு கப்பல் கடல் பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஏற்கனவே குஜராத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த சொகுசு கப்பல், தற்போது புதுச்சேரி சுற்றுலாத் துறைக்கு புதுவரவாக கொண்டுவரப்பட்டு இறுதிக்கட்ட மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 100 அடி நீளம், 40 அடி அகலம் மற்றும் 50 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பலில், ஒரே நேரத்தில் 150 பயணிகள் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
முழுவதும் ஏசி வசதி கொண்ட இக்கப்பலின் எந்தப் பகுதியில் அமர்ந்தாலும் கடலின் அழகை முழுமையாக ரசிக்கும் வகையில் சுற்றிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதோடு, மேல் தளத்தில் இயற்கைச் சூழலில் கடலை ரசிக்கும் வண்ணம் திறந்தவெளி பூங்காவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக கப்பலிலேயே உணவருந்தும் கூடம் மற்றும் நவீன கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 20ம் தேதி திறப்பு விழா காண உள்ள இந்த கப்பல், கடலுக்குள் 5 நாட்டில் கல் மைல் தொலைவு வரை சென்று சுற்றிப் பார்க்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தினமும் மூன்று முறை கடலுக்குள் சென்று வர அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பயணிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
