/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் பிரதமரை அவதுாறாக பேசிய வழக்கு; விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்
/
முன்னாள் பிரதமரை அவதுாறாக பேசிய வழக்கு; விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்
முன்னாள் பிரதமரை அவதுாறாக பேசிய வழக்கு; விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்
முன்னாள் பிரதமரை அவதுாறாக பேசிய வழக்கு; விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்
ADDED : பிப் 19, 2025 04:09 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோர்ட்டில் ஆஜரானார்.
விக்கிரவாண்டி அடுத்த நேமூரில் கடந்த 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதுாறாக பேசியதாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் அளித்த புகாரில், கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அன்று விசாரணைக்கு ஆஜரான சீமான், கடந்த நவ., 4, 6ம் தேதிகளில் நடந்த விசாரணையில் ஆஜராவில்லை.
கடந்த ஜனவரி 21ம் தேதி நடந்த விசாரணையில் ஆப்சென்ட் மனுவை அவரது வழக்கறிஞர் நீதிபதிபதியிடம் வழங்கினார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சத்யநாராயணன், சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கவும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் மனு அளித்திருந்தார்.
கடந்த 6ம் தேதி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், சீமான் மனுவை தள்ளுபடி செய்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.
அதையடுத்து, நேற்று, விக்கிரவாண்டி கோர்ட்டில் நேற்று காலை 10:32 மணிக்கு சீமான் ஆஜராகி, நீதிபதியிடம் 'வழக்கு தொடர்பான தனது பேச்சின் 'சிடி'யை வழங்க வேண்டும்' என மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி சத்யநாராயணன், வழக்கு விசாரணையின் போது, 'முன்னாள் பிரதமர் ராஜிவை அவதுாறாக பேசியதாக குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா' என கேட்டார். அதற்கு சீமான், 'நான் அவதுாறாக பேசவில்லை' என கூறினார். இதையடுத்து நீதிபதி, 'சற்று நேரம் காத்திருங்கள் மீண்டும் அழைக்கிறேன்' என கூறினார்.
தொடர்ந்து பிற்பகலில் நடந்த விசாரணையில் வரும் மார்ச் 26ம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

