ஐ.ஆர்.பி.என்., 2வது பட்டாலியனில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செந்தில்குமார் கோரிக்கை
ஐ.ஆர்.பி.என்., 2வது பட்டாலியனில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செந்தில்குமார் கோரிக்கை
ADDED : ஆக 28, 2026 06:53 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரி முழுதும் மின்சாரம் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிநீர் பிரச்னைகள் நிலவி வருகிறது. சமூக செலவில் இலவச அரிசி, முதியோர் ஓய்வூதியம், மகளிர் உதவித்தொகை, காஸ் மானியம் போன்ற நேரடி நலத்திட்டங்களின் பங்கு ரூ.2,110 கோடி. மீதி தொகை கல்வி, சுகாதாரம், குடிநீர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கே செல்கிறது.
வழக்கம் போல ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச மானிய உயர்வு கூட இந்த ஆண்டு நமக்கு வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு மத்திய அரசு நமக்கு அளித்த நேரடி மானியம் ரூ. 3,512.86 கோடி. ஆனால், இந்த ஆண்டு ரூ. 3,517 கோடியை தான் ஒதுக்கியுள்ளது.
நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய 45 சதவீத மத்திய மானியப் பங்கைப் போராடிப் பெற்றால், ஆண்டிற்கு கூடுதலாக ரூ1,066 கோடி திரும்பச் செலுத்தத் தேவையில்லாத நிதியாக கிடைக்கும். நமது சொந்த வருவாய் 7 மடங்கு உயர்ந்திருந்தாலும், சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தாவிட்டால் வருவாய் தேக்கநிலையை அடைந்துவிடும்.
இயற்கை விவசாய திட்டங்கள், நேரடி நெல் கொள்முதல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சாகுபடியை மேம்படுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் கடன் தள்ளுபடி, இலவச மனைப்பட்டா வழங்கிட வேண்டும். ஐ.ஆர்.பி.என்., 2வது பட்டாலியனில் மகளிர்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்றார்.
