பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ‘சேவா துாதர் இயக்கம்’ பயிற்சி
பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ‘சேவா துாதர் இயக்கம்’ பயிற்சி
UPDATED : நவ 28, 2026 07:18 PM
ADDED : நவ 28, 2026 07:18 PM

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலப் பணிகளையும், சேவைகளையும் போற்றும் வகையில், இந்தியா முழுதும் பா.ஜ., சார்பில், ‘சேவா துாதர் இயக்கம்’ என்ற பெயரில், டிசம்பர் 1 முதல் 25ம் தேதி வரை பல்வேறு சேவைப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளிலும் சமூக சேவைகள், மக்கள் சந்திப்பு, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, புதுச்சேரி பா.ஜ., சார்பில், மாநில தலைவர் ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில், மாநிலத் தலைமை அலுவலகத்தில் ‘சேவா துாதர் இயக்கம்’ மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாகக் செல்வகணபதி எம்.பி., தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இளங்குமார் சம்பத், தமிழக மாநில இளைஞரணி தலைவர் சூர்யா, தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணித் தலைவர் வீரதிருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்று, இயக்கத்தின் நோக்கம், செயல்படுத்தும் முறைகள் மற்றும் மக்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டிய சேவைப் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், லட்சுமிநாராயணன், மாநிலத் துணைத் தலைவர்கள் அகிலன், ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர். மாநில நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் தலைவர்கள், மாவட்டம், தொகுதி நிர்வாகிகள், சேவா துாதர் இயக்கப் பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
