/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆரோவில் கையெழுத்து
/
ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஆரோவில் கையெழுத்து
ADDED : ஜன 18, 2025 06:52 AM

வானூர் : குஜராத் வருவாய்த்துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் 7 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆரோவில் கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி (பொறுப்பு) சீதாராமன், பணிக்குழு உறுப்பினர் அனு மஞ்சிதர், அரவிந்தர் சர்வதேச கல்வி மையத்தின் பொறுப்பாளர் சஞ்சீவ் ரங்கநாதன் உள்ளிட்டோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;
ஆரோவில் சர்வதேச நகரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50 ஆயிரம் பேர் வசிக்க வேண்டும் என்பது அன்னையின் நோக்கமாகும். தற்போது 3 ஆயிரம் பேர் உள்ளனர்.
இதனால் அனைத்து மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு பலரை கொண்டு வர ஆயத்தங்களை ஆரோவில் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.
முதற்கட்டமாக குஜராத் மாநிலத்துடன் பல்கலைக் கழகங்கள், அரசு சார்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.
ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், ஆரோவில் திட்டப்பணிகளில் ஈடுபடுவோர் தங்கள் செயல்பாடுகளை தெரிவித்தனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகம், காந்திநகர் காமதேனு பல்கலைக்கழகம், இண்டூஸ் பல்கலைக்கழகம், சூரத் ஆரோ பல்கலைக்கழகம், சர்தார்படேல் பல்கலைக்கழகம், குஜராத் வருவாய் துறை, நேரு அறக்கட்டளை மேம்பாட்டுமையம் ஆகிய 7 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்.
குஜராத் மாநிலத்தில் இருந்து தன்னார்வலர்களை ஆரோவில்லுக்கு அழைத்துள்ளோம்.
அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளோம். வெளிநாடுகளிலும் ஆன்லைனில் ஆரோவில் அழைக்கிறது என்று தொடர்பு கொண்டு வருகிறோம்.
ஆரோவில் சுற்றுச்சாலை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆரோவில் மாத்ரி மந்திர் வருவோர் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் விரைவில் தீரும்.
சென்னை ஐ.ஐ.டி., மையம் அமைக்க 100 ஏக்கர் கோரியுள்ளனர். இதுதொடர்பான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
அடுத்து ஆரோவில்லில் பல்கலைக்கழகம் அமைக்க திட்டமிட்டு, அதற்கு நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.