அடுத்தடுத்து போலி மருந்து தொழிற்சாலைகள் சிக்குவதால் அதிர்ச்சி:மருந்து கட்டுப்பாட்டு துறையின் அலட்சியத்தால் தலைகுனிவு
அடுத்தடுத்து போலி மருந்து தொழிற்சாலைகள் சிக்குவதால் அதிர்ச்சி:மருந்து கட்டுப்பாட்டு துறையின் அலட்சியத்தால் தலைகுனிவு
UPDATED : ஜூலை 14, 2026 08:44 PM
ADDED : ஜூலை 14, 2026 08:43 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்தடுத்து போலி மருந்து தொழிற்சாலைகள் சிக்கி வருவதால், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ள பொதுமக்கள், மாநிலத்தில் மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை ஒன்று செயல்பாட்டில் உள்ளதா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.
சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 9 மருத்துவக் கல்லுாரிகளும், 3 பல் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. மேலும், புதுச்சேரியில் சிறிய மற்றும் பெரியது என 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினீக்குகள் உள்ளன. இதனால், உள்ளூர் மட்டுமன்றி தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர். இதனால், புதுச்சேரி மினி மருத்துவ கேந்திரமாக மாறி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில், சமீப காலமாக பூதாகரமாக கிளம்பி வரும் போலி மருந்து விவகாரம், மருத்துவ கேந்திரம் என்ற நிலை மாறி, போலி மருந்து கேந்திரம் என்ற நிலை வந்துவிடுமோ என மக்களிடை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன்,42; என்பவர் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி மருந்துகள் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள், குடோன்களில் சோதனை நடத்தி ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பெண்கள் உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு, கடந்தாண்டு இறுதியில் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. அதே வேளையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த போலி மருந்து வழக்கில், சி.பி.ஐ., விசாரணை துவங்காத நிலையில், புதுச்சேரியில் மீண்டும் ஒரு போலி மருந்து தொழிற்சாலை சிக்கியுள்ளதும், இந்த தொழிற்சாலையில், நரம்பு பிரச்னைக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் 'பிரிகாபலின்-150' மருந்தை, பிரபல நிறுவனத்தில் பெயரில் போலியாக தயாரித்து நாடு முழுவதும் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து வந்துள்ளது, மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 73 மருந்து தொழிற்சாலைகள் உள்ளன. இதற்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு துறைதான் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தொழிற்சாலைகளை, புதுச்சேரி மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வில், கம்பெனியில் இருப்பில் உள்ள மூலப் பொருட்கள் கொள்முதல் விபரங்களை ஆய்வு செய்தாலே, அனுமதி பெற்ற மருந்துகள் தான் தயாரிக்கப்படுகிறதா என்பது தெரிந்துவிடும்.
மேலும், அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுக்கு சென்றாலே முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.
ஆனால், மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்விற்கு செல்லாமல், ஏ.சி., அறைக்குள்ளே இருந்து 'மாமூலான' பணி செய்த காரணத்தினால், புதுச்சேரி போலி மருந்து கேந்திரமாக மாறி வருகிறது.
கடந்தாண்டு சிக்கிய போலி மருந்து வழக்கில் நடத்திய சோதனையில் 30 வகையான மருந்துகள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தற்போது சிக்கியுள்ள போலி மருந்து தொழிற்சாலையிலும் 20க்கும் மேற்பட்ட போலி மருந்துகளுக்கான மூலப் பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
புதுச்சேரிக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரை போககவும், மக்களிடையே ஏற்பட்டுள்ள போலி மருந்து அச்சத்தை போக்கிட, அரசு இனியேனும் மருந்து தொழிற்சாலைகளை தொடர் ஆய்வு நடத்த புதிய குழுவை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
