தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அழகுக்காக அமைத்தது... ஆபத்தாய் நிற்கிறது குறிஞ்சி நகர் பூங்காவில் ‘ஷாக்’

அழகுக்காக அமைத்தது... ஆபத்தாய் நிற்கிறது குறிஞ்சி நகர் பூங்காவில் ‘ஷாக்’

அழகுக்காக அமைத்தது... ஆபத்தாய் நிற்கிறது குறிஞ்சி நகர் பூங்காவில் ‘ஷாக்’


ADDED : செப் 23, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியின் பரபரப்பான நகர்ப்புறச் சூழலில், லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதி வாசிகளுக்கு ஒரு பெரிய வடிகாலாக விளங்குவது அங்குள்ள ராஜிவ்காந்தி பூங்கா.

மாலை 5 மணி ஆகிவிட்டாலே போதும். அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ‘ஸ்கூல் பேக்’களைக் கழற்றி எறிந்துவிட்டு ஓடிவரும் சுட்டிப் பட்டாளங்களின் குதுாகலச் சிரிப்பொலியாலும், அன்றாட வேலைப் பழுவை மறந்து நிம்மதியாக ‘வாக்கிங்’ செல்லும் பெரியவர்களின் அரட்டைகளாலும் இந்தப் பூங்கா அப்படியே உயிர்பெற்றுவிடும்.

சறுக்கு மரம், ஊஞ்சல், சாகசக் கயிறுகள் எனச் சிறுவர்களைச் சுண்டி இழுக்கும் விளையாட்டு உபகரணங்களுக்கு இங்கு பஞ்சமே இல்லை. குழந்தைகளைப் பத்திரமா பூங்காவுக்குள்ள விட்டுட்டா போதும், அவங்க பாட்டுக்கு விளையாடிட்டு இருப்பாங்க... நாங்களும் நிம்மதியா நாலு ரவுண்ட் நடைபயிற்சி போவோம் என்று அப்பகுதி மக்கள் பெருமிதத்தோடு சொல்லிவந்த காலம் ஒன்று இருந்தது.

ஆனால், இன்றோ பூங்காவின் பிரதான நுழைவாயிலைக் கடக்கும்போதே பெற்றோர்களின் நெஞ்சில் ஒருவிதப் பதற்றமும் பயமும் தொற்றிக்கொள்கிறது. அதற்குக் காரணம், பூங்காவிற்குள் எவ்விதப் பயன்பாடும் இன்றி அச்சுறுத்தலாக வீற்றிருக்கும் செயற்கை நீரூற்றுத் தொட்டிகள்தான்..

பூங்கா தொடங்கப்பட்ட புதிதில், அதை அழகுபடுத்துவதற்காகவும் பார்வையாளர்களைக் கவர்வதற்காகவும் பூங்காவின் மையப்பகுதியில் பிரம்மாண்டமான முறையில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டன.

ஆரம்பத்தில் சில காலம் தண்ணீர் பீறிட்டு அடித்து வண்ணம் காட்டிய இந்த நீரூற்றுகள், காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றிச் செயலிழந்துபோயின. அன்று அழகுக்காக அமைக்கப்பட்ட அதே நீரூற்றுத் தொட்டிகள் தான், இன்று பூங்காவிற்கு வரும் பிஞ்சுக் குழந்தைகளுக்குப் பெரிய ‘ஆபத்துத் தொட்டி’களாக உருமாறி நிற்கின்றன.

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், லேசான துாறல் போட்டாலே போதும்... இந்தச் செயலிழந்த தொட்டிகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நின்றுவிடுகிறது. பராமரிப்பில்லாத இந்தத் தேக்க நீர், ஊரின் பிரதான கொசு உற்பத்தி மையமாக  மாறிப்போய் விடுகிறது.

டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் விளையாடும் ஆவலில் கட்டுப்பாடின்றி ஓடிவரும் சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக இந்தத் தண்ணீரில் தவறி விழுந்துவிடுவார்களோ என்று பெற்றோர்கள் அச்சமடைகின்றனர்.

 பூங்காவிற்குத் தினமும் வரும் உள்ளூர்வாசி ஒருவர் நம்மிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்:

குழந்தைங்க வீட்லயே மொபைல் போனை பார்த்துட்டு இருக்காங்களேனு தான் பூங்காவுக்குக் கூட்டிட்டு வரோம். இங்க வந்தா அவங்க பின்னாடியே காவலாளி மாதிரி ஓட வேண்டியதா இருக்கு. ஊஞ்சல்ல ஆடுற குழந்தைகள்கூடத் தவறி இந்தத் தொட்டிக்குள்ள விழுந்துடுமோனு பயமா இருக்கு. பயன்படாத இந்த நீரூற்றால் யாருக்கு என்ன லாபம்? என்றார் கொதிப்புடன்.

இந்தச் செயற்கை நீரூற்றுத் தொட்டிகளை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தை சமன்படுத்தி, குழந்தைகளுக்குப் பயன்படக்கூடிய புதிய விளையாட்டு உபகரணங்களை அமைக்கலாம் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us