விளையாட்டு மைதானங்களில் ஷூட்டிங்கா? கொந்தளிப்பில் விளையாட்டு சங்கங்கள்
விளையாட்டு மைதானங்களில் ஷூட்டிங்கா? கொந்தளிப்பில் விளையாட்டு சங்கங்கள்
UPDATED : நவ 12, 2026 12:02 AM
ADDED : நவ 12, 2026 12:00 AM

புதுச்சேரி: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பேவரிட் ஸ்பாட் ஆக மாறிப்போயிருக்கிறது புதுச்சேரி.
நகரின் மூலை முடுக்கெல்லாம் கேமராவும், லைட்களுமாக சினிமா பட்டாளம் வலம் வருவதை புதுச்சேரி மக்கள் ஒருவகையில் ரசித்தாலும், விளையாட்டுத்துறை முடிவால் இப்போது கொந்தளித்துள்ளனர் உள்ளூர் விளையாட்டு வீரர்கள்.
பிரச்னை இதுதான்... நகரின் மிக முக்கியமான பொது இடங்கள் ஒருபுறமிருக்க, தற்போது விளையாட்டு மைதானங்களையும் வரிசையாக சினிமா படப்பிடிப்பிற்கு தாரைவார்க்கத் தொடங்கி யிருக்கிறார்கள்.
அப்படி என்னதான் நடக்கிறது மைதானங்களில் என்று விளையாட்டு சங்க நிர்வாகிகளிடம் விசாரித்தபோது;
விளையாட்டு மைதானங்களை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விடுவது தொடர்பாக விளையாட்டுச் சங்கங்களுக்கோ அல்லது வழக்கமாகப் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கோ எந்தவித முன்னறிவிப்பும் தருவதில்லை. அதிகாலையிலேயே துாக்கத்தை மூட்டை கட்டிவிட்டு மைதானத்திற்கு ஓடிவரும் வீரர்கள், கடைசி நேரத்தில் இன்னைக்கு சூட்டிங் இருக்குப்பா... எல்லாரும் கிளம்புங்க என்று அதிகாரிகளாலும் செக்யூரிட்டிகளாலும் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் என, கொதிக்கிறார்கள்.
சமீபத்தில் புதுச்சேரியின் முதன்மை அடையாளமாகவும், விளையாட்டு வீரர்களின் உயிர்நாடியாக விளங்கும் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் சினிமா சூட்டிங்கிற்காக முழுமையாக ஒதுக்கப் பட்டது.
எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டதால், பயிற்சிக்காக வந்த நுாற்றுக்கணக்கான வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்ட அவலமும் அரங்கேறியது.
புதுச்சேரியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தரமான மைதானங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது இந்திரா காந்தி மைதானம். அதையும் சினிமா சூட்டிங்கிற்கு விட்டால், நாங்கள் எங்கு போய் பயிற்சி எடுப்பது என்றே புரியவில்லை என வேதனையோடு கூறுகின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.
விளையாட்டு வீரர்களின் பயிற்சி நேரம் பாதிக்காத வகையில், இரவில் அல்லது அவர்கள் பயிற்சி இல்லாத நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கலாமே. அந்த மாற்று ஏற்பாட்டைக் கூடச் செய்யத் தவறியது ஏன் என்பதும் வீரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இனியாவது வீரர்களின் அன்றாடப் பயிற்சி எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் சினிமா படப்பிடிப்புகளுக்கான நேரத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே புதுச்சேரி விளையாட்டு வீரர்களின் உரத்த குரலாக இருக்கிறது..
