வாலிபர் கொலையில் சித்தி கைது: பரபரப்பு தகவல்கள் அம்பலம்
வாலிபர் கொலையில் சித்தி கைது: பரபரப்பு தகவல்கள் அம்பலம்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:38 PM
புதுச்சேரி: நெல்லித்தோப்பு வாலிபர் கொலையில் உடந்தையாக இருந்த சித்தியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லித்தோப்பு ஜபார்பாய் தோட்டத்தில் வசித்தவர் சுரேஷ்குமார்,27; இவர் கடந்த 21ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தாய் பூங்கோதை அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். அதில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் சுரேஷ்குமாரை கொலை செய்தது நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ராஜி,25; ஜெய்கணேஷ்,22 என தெரியவந்தது.
தனது தங்கையை காதலித்த ராஜியை சுரேஷ்குமார் கண்டித்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, கொலை செய்த இருவரையும் போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ்குமாரின் சித்தியான நெல்லிக்குப்பம் ஆதிலட்சுமிக்கு,40; தொடர்பு இருப்பதை போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் ஆதிலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தியதில் , இறந்த சுரேஷ்குமாரின் தங்கை காதல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறி, ஆதிலட்சுமியை ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
மேலும், அவரிடம் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ்குமாரை கொலை செய்ய போவதாக ராஜி, ஜெய்கணேஷ் ஆகியோர் ஆதிலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். அவரும், எனக்கும் அவன் தொல்லை கொடுத்து வருகிறான், நீங்கள் செய்யுங்கள் என ஆதிலட்சுமி கூறியுள்ளார். மேலும், கொலையாளிகள் குறித்து தெரிந்து வைத்திருந்தும் போலீசாரிடம் தெரிவிக்காமல், மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆதிலட்சுமியை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
