UPDATED : அக் 06, 2026 01:28 AM
ADDED : அக் 06, 2026 01:26 AM
புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால் போக்குவரத்து போலீசார் புலம்பி வருகின்றனர்.
புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்னைகளை சரி செய்ய, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் பல்வேறு முக்கியச் சந்திப்புகளில் 98 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக டிராபிக் சிக்னல்கள், 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிராபிக் ஒழுங்குப்படுத்த இ.சி.ஆர்., மீன் மார்க்கெட்டில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைத்தனர்.
இந்த புதிய சிக்னல்கள் சிறிதாகவும், மரங்களால் மறைக்கப்பட்டு உள்ளன. இதனால் துாரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் இருப்பது தெளிவாக தெரிவதில்லை. புதிய சிக்னல்கள் கம்பங்கள், கேமராக்களின் தரம் குறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
புதிய சிக்னல் கம்பங்கள் தரமற்ற முறையில் உள்ளதாகவும், பலத்த காற்று வீசினால் உடைந்து விழும் என எச்சரிக்கின்றனர்.
மேலும், கோரிமேடு, மேட்டுப்பாளையம், முருங்கப்பாக்கம், ஜிப்மர், எல்லைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் இயங்காமல் உள்ளது.
