/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பக்தர்களின் அன்பில் தோற்பவன் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
பக்தர்களின் அன்பில் தோற்பவன் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
பக்தர்களின் அன்பில் தோற்பவன் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
பக்தர்களின் அன்பில் தோற்பவன் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : ஜன 13, 2024 07:14 AM

புதுச்சேரி ; முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று நடந்த மார்கழி மாத உபன்யாசத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம், திருப்பாவையின் 27ம் பாசுரம் குறித்து உபன்யாசம் செய்தார்.
பக்தியின் உச்சநிலையான 'ஸாயுஜ்ய' நிலையை இந்த பாசுரத்தில் ஆண்டாள் பிரார்த்திக்கிறாள். பகவானிடம் சென்று சேரும், கல்யாண நிலையை அதாவது ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இணையும் கல்யாணத்தை எண்ணி மகிழ்ந்து தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள். இதுதான் இன்றைய பாசுரத்தின் பொதுவான பொருள்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்றருளி இருக்கிறாள். அதாவது, பகவான் கூடாரை வெல்பவன். கூடியவரிடம் தோற்பவன். அவனின் அம்பிற்கு எதிர்த்தவர்கள் தோற்றார்கள். பக்தர்களின் அன்பிற்கு அவன் தோற்கிறான்.
இந்தப் பாசுரத்தில் கூடாரை என்ற சொல்லால், எம்பெருமானை வெறுப்பவர்களைக் குறிப்பிடுகின்றாள். “கூடோம்” என்றிருந்த கம்சன், சிசுபாலன் முதலியோரை பகவான் வீரத்தால் வென்றான். கூடிய நம்மை, தன் நீர்மையால், வெல்வான்!
இராவணன் செருக்களத்தில் நிராயுதபாணியாக்கப்பட்டு நின்ற போது, அவனிடம் “இன்று போய் நாளை வா” என்று அருளி, இனியாவது திருந்தி அவன் சரணாகதி செய்ய சந்தர்ப்பம் கொடுத்தார். அதனால், அவன் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்.
கீதையின் சாரமாக, ஆண்டாள் நாச்சியார் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்று சுருக்கமாக அருளி, கூடார் என்பது, இந்திரியங்களால் ஆட்டிவைக்கப்படும் நம் மனம் என்று அறிவுறுத்துகின்றாள்.
இன்றைய பாசுரத்தில் மூட நெய் பெய்து முழங்கை வழி வார என்பதை, பாலில் சோறு கலந்தார்போல், பாலில் நெய் கலந்தார்போல் என்று ஒன்றோடு ஒன்று கலந்து புதிய நறுசுவையுடன் உண்போம்.
அவனில் நாமும், நம்மில் அவனுமாக கலந்து கரைந்து, நாம் அவனுக்கு உணவாகவும், நமக்கு அவன் உணவாகவும் உண்டு களித்து உன்னுடன் நாங்கள் ஒன்றிவிடும் பரிசு தான், நாடு புகழும் நல்ல பரிசு என்று சொல்கிறாள்.
ஆத்மா எம்பெருமானிடம் ஐக்கியமாகும் நிலை உணர்த்தி, எம்பெருமானிடம் நீயும் நாமுமாக கலந்து என்றென்றும் புதியதாக நித்யமாக கூடியிருந்து இன்பத்தை பெறுவோம் என்று ஆண்டாள் பாசுரத்தை முடிக்கிறாள்.
எம்பெருமானுக்கு ஆண்டாள் பிரார்த்தித்த படி, வேண்டுதலை நிறைவேற்றிய படி, நாமும் எம்பெருமானுக்கு நுாறு தடா அக்காரவடிசல் அமுது கண்டருளப்பண்ணி அனுபவிப்போம்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.