அண்ணன் கொலைக்கு பழிதீர்த்த தம்பி உட்பட ஆறு பேர் சரண்
அண்ணன் கொலைக்கு பழிதீர்த்த தம்பி உட்பட ஆறு பேர் சரண்
UPDATED : நவ 10, 2026 07:48 PM
ADDED : நவ 10, 2026 07:45 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே அண்ணனை கொலை செய்தவரை, கூட்டாளிகளுடன் சேர்ந்து படுகொலை செய்து பழிதீர்த்த தம்பி உட்பட ஆறு பேர் சரணடைந்தனர்.
புதுச்சேரி, வில்லியனுார், ஆத்துவாய்க்கால்பேட்டை சேர்ந்தவர் டாடா ஏஸ் டிரைவர் பிரபாகரன். இவரது மனைவி கஸ்துாரி. இவர்களின் மகன் ஜனா, 21. இவரை கடந்த ஜன., 25ம் தேதி இரவு வி.மணவெளி திருவேணி நகர் மந்தவெளியில் ஒரு கும்பல் படுகொலை செய்தது.
இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, நடராஜன் நகரை சேர்ந்த சிவா (எ) சிவபாலன், 22; ஜி.என் பாளையம் அருள், 23; அரும்பார்த்தபுரம் முரளி,26, உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் ஏழு பேரும் ஜாமினில் வந்தனர்.
தனது அண்ணன் ஜனாவை கொலை செய்த கும்பலை பழிதீர்க்க தக்க தருனத்திற்காக காத்திருந்தார் அவரது தம்பி தீனா. நேற்று முன்தினம் மாலை ஒதியம்பட்டில் உள்ள காலிமனையில் முரளி உள்ளிட்ட நண்பர்கள் மது குடிப்பதாக தீனாவிற்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து தீனா தனது கூட்டாளிகளுடன் நான்கு பைக்குகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று முரளியை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செலவன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்ளிட்ட போலீசர், முரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து முரளி தாய் வள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே ஆத்துவாய்க்கால்பேட்டை சேர்ந்த தீனா, திலிப் ஆகியோர் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவே சரணடைந்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆத்துவாய்க்கால்பேட்டை சரத், விஷ்வா, அரவிந்தன் மற்றும் பிரதீப் ஆகியோர் புதுச்சேரி கோர்ட்டில் நேற்று மாலை சரணடைந்தனர். இந்த கொலையில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
