/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல கோடி ரூபாயில் கட்டிய புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் குளறுபடி; அடிப்படை வசதிகளை கோட்டைவிட்ட ஸ்மார்ட் சிட்டி - நகராட்சி முதல் நாளிலேயே பயணிகள் கடும் அதிருப்தி
/
பல கோடி ரூபாயில் கட்டிய புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் குளறுபடி; அடிப்படை வசதிகளை கோட்டைவிட்ட ஸ்மார்ட் சிட்டி - நகராட்சி முதல் நாளிலேயே பயணிகள் கடும் அதிருப்தி
பல கோடி ரூபாயில் கட்டிய புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் குளறுபடி; அடிப்படை வசதிகளை கோட்டைவிட்ட ஸ்மார்ட் சிட்டி - நகராட்சி முதல் நாளிலேயே பயணிகள் கடும் அதிருப்தி
பல கோடி ரூபாயில் கட்டிய புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் குளறுபடி; அடிப்படை வசதிகளை கோட்டைவிட்ட ஸ்மார்ட் சிட்டி - நகராட்சி முதல் நாளிலேயே பயணிகள் கடும் அதிருப்தி
ADDED : மே 03, 2025 04:45 AM

புதுச்சேரி :  ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் மெகா குளறுபடியுடன் திறக்கப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் ஒருவழியாக நேற்று திறக்கப்பட்டது.
ஆனால் ஸ்மார்ட் சிட்டி, நகராட்சி என அரசு துறைகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் மெகா குளறுபடியுடன் திறக்கப்பட்டது. அதுவும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளையும் கூட சரி செய்யாமல் அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டாலும் பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். ஆனால் ஸ்மார்ட் சிட்டி, நகராட்சி இதனை செய்ய தவறிவிட்டன. பல கோடி செலவில் கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமிரா இல்லை. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதம் நடந்தால் கண்டு பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் ஒரு பகுதியில் தான் கழிவறை வசதி முற்றுப்பெற்றுள்ளது.
மற்றொரு பக்கம் கட்டு மான பணி நடந்து வருகிறது. தினமும் 75 ஆயிரம் பேர் வரை வந்து செல்லும் இடத்தில் கழிவறை போதிய அளவில் இல்லாததால் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனையும் நகராட்சியும் ஸ்மார்ட் சிட்டி யும் கண்காணிக்க தவறிவிட்டன.
புது பஸ் ஸ்டாண்ட் அத்தியாவசிய கடைகள் ஏதும் இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கடைகள் ஒன்றுக்கூட இல்லை. இதனால் ஒவ்வொரு தடவையும் அத்தியாவசிய பொருட்களை வாங்க அங்கும் இங்கும் பொதுமக்கள் அலைந்தது பரிதாபமாக இருந்தது. இந்த விஷயத்திலும் இரு துறைகளும் கோட்டை விட்டுள்ளன.
எந்த ஊர் பஸ் ஸ்டாண்ட் சென்றாலும் அங்கு போலீஸ் பூத் கட்டாயம் இருக்கும். ஆனால் புது பஸ் ஸ்டாண்டில் ஒதுக்குபுறமாக போலீஸ் பூத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு எழும்புவே இப்போது தான் ஏற்கனவே இருந்த இடத்தில் போலீஸ் பூத் கட்டப்பட்டு வருகிறது. போலீஸ் பூத் பணி எப்போது முடிவது, அங்கு எப்போது போலீஸ் வருவது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் போலீசாரின் கருத்தை அறிய இரு துறைகளும் தவறிவிட்டன.
புது பஸ் ஸ்டாண்ட் பின்னாடி பி.ஆர்.டி.சி., பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து குறுகிய அய்யனார் கோவில் தெரு வழியாக பி.ஆர்.டி.சி., பஸ்கள் மறைமலையடிகள் சாலையில் வந்தன. இதனால் அச்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதை தடுக்க புது பஸ் ஸ்டாண்ட் பின்பு உள்ள மதில் சுவர் உடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழிமட்டுமே உள்ளதால், அங்கும் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பி.ஆர்.டி.சி., பணிமனைகளில் உள்ளே செல்ல ஒரு வழியும், வெளியேற மற்றொரு வழியும் ஏற்படுத்தினால் மட்டுமே நெரிசல் ஏற்படாது. இதனை பி.ஆர்.டி.சி., இணைந்து செய்யாமல் கோட்டை விட்டுள்ளது.
சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாகவும், இ.சி.ஆர்., வழியாக அதிக அளவில் பஸ்கள் வருகின்றன. ஆனால் அதற்கேற்ற இடம் புது பஸ் ஸ்டாண்டில் ஏற்படுத்தப்படவில்லை. எனவே முதல் நாளிலேயே வெளியூர் பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இது தான் புதுச்சேரி பஸ் ஸ்டாண்டா. என்ன உள்ளே ஒன்னுமே இல்லை. ஒரு கடையை கூட காணோம் என்று கிண்டலடிக்கின்றனர். சென்னை கிளாம்பாக்கத்தில் சர்வதேச தரத்தில்  கட்டப்பட்டுள்ள எங்க ஊர் புது பஸ்டாண்டை போய் முதலில் பாருங்கள். அப்புறம் அவசர கோலத்தில் குறை பிரசவத்தில் பிறந்த உங்க புதுச்சேரி புதுபஸ் ஸ்டாண்டினை ஒப்பிட்டு பாருங்கள். உண்மை புரியும் என்று எள்ளி நகையாடிவிட்டு செல்கின்றனர்.
வெளியூர் பயணிகளின் வார்த்தையில் உண்மை இல்லாமல் இல்லை. ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்டில் பெருக்கும் ஸ்மார்ட் இல்லை. சுத்த வேஸ்ட். இதையா இவ்வளவு நாட்களாக கட்டிக் கொண்டு இருந்தீர்கள் என்று உள்ளூர்வாசிகளும், அரசியல் கட்சிகளும் கமெண்ட் அடிக் கின்றனர்.
புது பஸ் ஸ்டாண்ட் என்பது மாநிலத்திற்கு பெருமை தரும் விஷயம். ஆனால் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திட்டமிடல் இல்லாமல், ஸ்மார்ட் சிட்டியும், நகராட்சியும் அவசரம் காட்டி திறந்துள்ளதால், இப்போது அப்பாவி பொதுமக்களும், பயணிகள் தான் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

