பாகூர் அருகே குடிநீரில் கலந்த சோப்பு திரவம்: நுரையாக பொங்கி வந்ததால் பரபரப்பு
பாகூர் அருகே குடிநீரில் கலந்த சோப்பு திரவம்: நுரையாக பொங்கி வந்ததால் பரபரப்பு
UPDATED : ஆக 11, 2026 11:33 PM
ADDED : ஆக 11, 2026 11:31 PM
பாகூர்: பாகூர் அருகே குடிநீரில் கலந்த சோப்பு திரவம் நுரையாக பொங்கி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏம்பலம் தொகுதி, அரங்கனுார் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் அங்குள்ள பேட் பகுதியில் குடிநீர் குழாயில் தண்ணீர் வந்துள்ளது. தண்ணீரை பெண் ஒருவர் பாத்திரத்தில் பிடித்த போது, நுரையாக பொங்கி வழிந்தது.
உடனே, அப்பெண், பாத்திரத்தில் சோப்பு கரை இருந்திருக்கும், அது தண்ணீரில் கரைந்து இருக்குமோ என மீண்டும் மீண்டும் அதனை கழுவி தண்ணீரை பிடித்துள்ளனர். அப்போதும், தண்ணீரில் நுரை பொங்கி வழிந்துள்ளது. உடனே, அவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இதேபோல், அந்த பகுதி முழுதும் உள்ள குழாய்களில் வந்த தண்ணீரில் நுரை வெளியானதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து குடிநீர் வழங்கல் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள வாஷிங் லிக்யூட் பேக் செய்யும் சிறிய கம்பெனியில் இருந்து அந்த திரவம் தண்ணீரில் கலந்தது தெரியவந்தது. குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை ரப்பர் பைப் மூலமாக அந்த கம்பெனியில் உள்ள வாஷிங் லிக்யூட் டேங்கில் பிடித்தபோது, ஊழியர்கள் அந்த பைப்பை எடுக்காமல் விட்டு விட்டதும், தண்ணீர் நின்ற பிறகு, வாஷிங் லிக்யூட் டேங்கில் இருந்த குழாய் மூலமாக குடிநீர் குழாய் வழியாக சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குடிநீர் வழங்கல் பிரிவு அதிகாரிகள் குழாயை சுத்தம் செய்து தண்ணீரை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
