/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இடித்து அகற்றம்: கடற்கரை சாலையில் தரைமட்டமாக்கப்பட்ட சேவை மையம் : தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி
/
இடித்து அகற்றம்: கடற்கரை சாலையில் தரைமட்டமாக்கப்பட்ட சேவை மையம் : தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி
இடித்து அகற்றம்: கடற்கரை சாலையில் தரைமட்டமாக்கப்பட்ட சேவை மையம் : தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி
இடித்து அகற்றம்: கடற்கரை சாலையில் தரைமட்டமாக்கப்பட்ட சேவை மையம் : தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி
UPDATED : ஜன 09, 2026 05:09 AM
ADDED : ஜன 09, 2026 05:07 AM

கடற்கரையில் செயல்பட்டு வந்த, பொதுநல மையம் திடீரென இடித்து தரைமட்டமாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் லே கபே ஓட்டலுக்கு அருகில், சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பொதுநல நோக்கத்திற்காக, 'ஐ பாண்டி' தகவல் சேவை மையம் செயல்பட்டு கொண்டிருந்தது.
இந்த மையத்தில் இலவச பயண கையேடு, புதுச்சேரி மேப், இலவச வைபை, இலவச குடிநீர், பெண்களுக்கு இலவச நாப்கின், குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை என சுற்றுலா பயணிகளுக்கு தேவையான சேவைகள் 'சிசி டிவி' கேமரா கண்காணிப்புடன் இலவசமாக அளிக்கப்பட்டு வந்தது. மேலும், கடற்கரை சாலையில் வாக்கிங் செல்லும் முதியோர்களுக்கு திடீரென தேவைப்படும் மருத்துவ உதவிகளும் 'ஐ பாண்டி' மையத்தில் வழங்கப்பட்டு வந்தது. இங்கு, அவசர உதவிக்காக எமர்ஜென்சி ஆக்சிஜன் சிலிண்டர் எந்த நேரமும் தயாராக வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரண்பேடி பாராட்டு
'ஐ பாண்டி' மையத்தின் இலவச சேவைகளை பார்த்த, கவர்னராக இருந்த கிரண்பேடி, முன்மாதிரியான முயற்சி என்று பெரிதும் பாராட்டினார். புதுச்சேரிக்கு வருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 'இந்த மையத்தில் வழங்கப்படும் இலவச சேவைகள் எங்கள் நாட்டில், எங்கள் மாநிலத்தில்கூட இல்லை' என்று பெருமிதமாக இணைய பக்கங்களில் புகழ்ந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த 'ஐ பாண்டி' தகவல் சேவை மையத்தை, புதுச்சேரி நகராட்சி சமீபத்தில் அதிரடியாக இடித்து அகற்றி விட்டது.
ஏன் இடிக்கப்பட்டது?
'ஐ பாண்டி' தகவல் சேவை மையம் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டது கிடையாது. கடற்கரைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவல்களை அளிப்பதற்காக, கடந்த 2015ம் ஆண்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியுடன் துவக்கப்பட்டது.
குறிப்பாக, சுற்றுலாத் துறை, கிரிம்சன் குளோபல் கன்சல்டன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவை மையத்தை அமைத்தது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் மையத்தை அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அனுமதி அளித்தது. மின்சார துறையும் தனது பங்கிற்கு மின் இணைப்பு கொடுத்து ஆதரவளித்தது. இப்படி அனைத்துமே சரியாக இருந்த நிலையில், புதுச்சேரி நகராட்சி எந்த நோட்டீசும் கொடுக்காமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மையத்தை இடித்து அகற்றியது சமூக தொண்டு நிறுவனங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேவை மையம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒவ்வொரு அரசு துறையாக ஏறி இறங்கிய அந்த நிறுவனம், கடைசியாக நீதிக்காக சென்னை ஐகோர்ட் கதவை தட்டியுள்ளது.
இது, நியாயமா?
சொந்தமாக தொழில் செய்பவர்கள், நிறுவனம் நடத்துபவர்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை நாட்டு மக்களுக்கும், சமுதாயத்திற்கும் செலவிட நினைக்கின்றனர். இதற்காக, சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கட்டடம் கட்டி தருகின்றனர்; ஆட்களையும் நியமனம் செய்கின்றனர். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்கின்றனர். இதுபோன்ற பொதுநல நோக்கத்துடன், அரசு அனுமதியுடன் 'ஐ பாண்டி' தகவல் சேவை மையம் இயங்கி வந்தது. அது, திடீரென இடிக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் நல்லது செய்ய வருபவர்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தி, துரத்தி அடிப்பது எந்தவிதத்தில் நியாயம்? இப்படி செய்தால் சமூகத்திற்கு உதவி செய்ய, நன்றி கடனை திருப்பி செலுத்த யார் முன் வருவார்கள்? நல்லது செய்வதற்கு இப்படி கோர்ட் படி ஏறி அலைய வேண்டுமா? இந்த விவகாரம், தனி நபரின் பிரச்னை அல்ல; இது, சமூக பொறுப்புணர்வின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த விஷயத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நேரடியாக தலையிட்டு, புதுச்சேரி நகராட்சிக்கு பொது அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் எந்த ஒரு சமூக தொண்டு அமைப்புகளுக்கும் நடக்காத வகையில், பொதுவான வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும்.
- நமது நிருபர் -

