/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி மூடப்படாது பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
/
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி மூடப்படாது பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி மூடப்படாது பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி மூடப்படாது பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
ADDED : அக் 09, 2025 11:28 PM
புதுச்சேரி: சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி எக்காரணம் கொண்டும் மூடப்படாது என சங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சொசியெத்தே புரோகிரேசீஸ்த் சங்க உறுப்பினர் ராமலிங்கம் கூறியதாவது:
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் சங்கம் 1880ம் ஆண்டு துவங்கி, பொது சேவைகள் செய்து வந்தது. சங்கம் சார்பில், புதுச்சேரியில் இந்து மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 1921ம் ஆண்டு காளத்தீஸ்வரன் வீதியில், சொசியெத்தே புரோகிரேசீஸ்த் உயர்நிலைப்பள்ளி துவங்கப்பட்டு, இயங்கி வருகிறது.
தற்போது இந்த கட்டடம் பழுதடைந்ததால் அதன் முதல் தளத்தில் இயங்கி வந்த வகுப்புகள், 20 ஆண்டிற்கு முன், கலவை சுப்புராய செட்டியார் வீதியில் உள்ள சங்கத்தின் சொந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
பள்ளியின் அனைத்து வகுப்புகளும் ஒரே கட்டடத்தில் இயங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை மூன்றாண்டாக வலியுறுத்தியது. அதனால், காளத்தீஸ்வரன் வீதியில் உறுதிதன்மையற்ற கட்டடத்தில் இயங்கி வந்த வகுப்புகளை, கலவை சுப்புராய செட்டியார் வீதியில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
சங்க பொதுக்குழுவில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நிதி நிலைமையை சமாளிக்கவும், செயல்படாமல் சிதிலமடைந்த பழைய பள்ளி கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்கும் நிறுவனத்திற்கு மாத வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஓர் சைவ உணவகத்திற்கு வாடகைக்கு விடவும், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கட்டடத்தை பள்ளியே திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இது பழைய கட்டடத்துக்கு மட்டுமே பொருந்தும். அதுவும் நிதிநிலை சீராகும் வரை மட்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பள்ளியின் நிதி ஆதாரத்தை பெருக்கவும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும், பள்ளியை தொய்வின்றி சிறப்பாக நடத்தவே இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன. எக்காரணத்தைக் கொண்டும் உணவகத்தில் மது விற்பனை செய்யக்கூடாது.
பள்ளியை மூடுவதற்கான அவசியமோ, கட்டாய சூழ்நிலையோ தற்போது இல்லை.
சங்கத்திற்கு சொந்தமான பழைய கட்டடத்தை புதுப்பிப்பதும், பள்ளியை நடத்துவது மட்டுமே எங்கள் குறிக்கோள்.
எக்காரணத்தைக் கொண்டும் பள்ளி மூடப்படாது' என்றார்.
பேட்டியின்போது சங்க தலைவர் வேதாந்தம், உறுப்பினர்கள் பாஸ்கர், பாலுராஜ், கருணாகரன், மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.