தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தை துாய்மைப்படுத்த சிறப்பு திட்டம்:களம் இறங்கியது மாசுக் கட்டுப்பாட்டு குழுமம்
தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தை துாய்மைப்படுத்த சிறப்பு திட்டம்:களம் இறங்கியது மாசுக் கட்டுப்பாட்டு குழுமம்
UPDATED : செப் 23, 2026 05:36 PM
ADDED : செப் 23, 2026 05:31 PM

புதுச்சேரி: தேங்காய்திட்டு முகத்துவாரத்தில் அரசு நடத்திய கூட்டு கள ஆய்வில் அதிர்ச்சியான ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. எனவே, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மாசுக்கட்டுபாட்டு குழுமம் மூலம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியின் இயற்கை கொடைகளுள் ஒன்றாக திகழும் தேங்காய்த்திட்டு முகத்துவாரம் தற்போது பிளாஸ்டிக் கழிவுகளின் ஆக்கிரமிப்பால் மூச்சுத்திணறி வருகிறது. இந்த சூழலில் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முகத்துவாரத்தை மீட்டெடுக்க புதுச்சேரி அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் துறைச் செயலர் ஸ்மிதாவின் நேரடி வழிகாட்டுதலில், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம், பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கிரீன் வாரியர் அமைப்பின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவினர் அண்மையில் தேங்காய்த்திட்டில் அதிரடி கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதிர்ச்சி 'ரிப்போர்ட்': தேங்காய்த்திட்டு பகுதியில் மிதந்த கழிவுகளை சேகரித்து, மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் நடத்திய 'பிளாஸ்டிக் கழிவு வகைப்பாட்டு ஆய்வில்' சில திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
நீர்ப்பரப்பை சல்லடையாக ஆராய்ந்ததில் ஆக்கிரமித்துள்ள கழிவுகளில் கேரி பேக்குகள் 23.5 சதவீதம் இருந்தது. குடிநீர் பாட்டில்கள் 7.5 சதவீதம், மதுபான பாட்டில்கள் 6.5 சதவீதம், பேக்கேஜிங் கவர்கள் 5.5 சதவீதம் என, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குப்பையிலிருந்து ஆயில்:: இந்த முகத்துவார கழிவுகளை அகற்றுவதோடு நிறுத்திவிடாமல், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யவும் பக்கா திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முகத்துவாரத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடுப்பு வலைகளில் சேகரமாகும் கழிவுகளை, பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசனப் பிரிவு மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை 'கிரீன் வாரியர்' அமைப்பு பாதுகாப்பாக குரும்பாம்பேட்டை திடக்கழிவு செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்லும். அங்கு பைரோலிசிஸ் எனும் நவீன வெப்பச் சிதைவுத் தொழில்நுட்பம் மூலம், இந்த பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் பயன்பாட்டுக்குரிய எரிபொருள் எண்ணெய்யாக உருமாற்றப்பட உள்ளது. இந்த எண்ணெய்யை பெரிய தொழிற்சாலைக்கு எரிபொருளாக பயன்படுத்த முடியும்.
'ரெட் கார்டு': புதுச்சேரியில் பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிக்கும் தொழிற்சாலைகளை என்றைக்கோ மூடியாகிவிட்டது. அப்புறம் எப்படி இவ்வளவு கேரி பேக்குகள் புழக்கத்தில் இருக்கின்றன என்று விசாரணை நடத்தியதில், அண்டை மாநிலங்களில் இருந்து பார்சல் சர்வீஸ்கள் மூலமாக புதுச்சேரிக்குள் கேரி பேக்குகள் ரகசியமாக கொண்டு வரப்படுவது தெரிய வந்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பார்சல் சேவை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சந்தை பகுதிகளில் அதிகாரிகள் இனி ரெய்டு நடத்தி தீவிர சோதனை மேற்கொள்ள உள்ளனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய உள்ளது.
புதுச்சேரிக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் கண்ட இடங்களில் பிளாஸ்டிக் பாட்டீல்களை துாக்கி வீசுகின்றனர். வீசி எறியும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களைச் சேகரிக்க, முக்கியச் சுற்றுலாத் தலங்களில் பிரத்யேக அமைப்பும் நடைமுறையும் கொண்டு வரப்படுகிறது.
இதேபோல் கலால் துறையுடன் கை கோர்த்து, பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களைச் சேகரிப்பதற்கான ஒரு புதிய திட்டமும் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
அரசின் இந்த ஒருங்கிணைந்த பிளான், கண்டிப்பான சட்ட அமலாக்கம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு செயல்படும்போது, புதுச்சேரியில் விரைவில் பிளாஸ்டிக் அரக்கனின் பிடியிலிருந்து விடுபட்டு, எழில் கொஞ்சும் பசுமை மண்டலமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என, மாசுக்கட்டுபாட்டு குழும அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
