/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியூரில் தேங்கி நிற்கும் கழிவுநீர் நிலத்தடி நீர் விஷமாகும் ஆபத்து
/
அரியூரில் தேங்கி நிற்கும் கழிவுநீர் நிலத்தடி நீர் விஷமாகும் ஆபத்து
அரியூரில் தேங்கி நிற்கும் கழிவுநீர் நிலத்தடி நீர் விஷமாகும் ஆபத்து
அரியூரில் தேங்கி நிற்கும் கழிவுநீர் நிலத்தடி நீர் விஷமாகும் ஆபத்து
ADDED : ஜன 07, 2025 05:54 AM

புதுச்சேரி: அரியூர் கிராமத்தில் 2 ஆண்டாக குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு அடைந்து வருகிறது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக, அரியூர் கிராமத்தில் மேம்பாலமும், சர்வீஸ் சாலையும் அமைத்தனர்.
மேம்பாலத்தின் இரு பக்கத்திலும் சர்வீஸ் சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த வடிகால் வாய்க்கால் முறையாக அமைக்காமல், தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை எதிரில் உள்ள பழைய சர்க்கரை ஆலை பங்களா இருந்த காலி இடத்தில் திறந்து விட்டனர்.
இதனால் கிராம குடியிருப்புகள், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவுநீரும் சர்க்கரை ஆலை பங்களா இருந்த காலி இடத்தில் குளமாக சேரத் துவங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக தேங்கி நின்றதால், தற்போது கழிவுநீர் குளமாகவே மாறி விட்டது.
இதனால் கடும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'குளம்போல் உருவாகி உள்ள கழிவுநீரால், கடந்த சில மாதங்களாக நிலத்தடியின் மேல் ஊற்று தண்ணீர் பழுப்பு நிறத்தில், துர்நாற்றத்துடன் வருகிறது. இதனால், கிராம மக்கள் பலர் தோல் வியாதியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்தது வெளியேறும் கழிவு நீர், கருப்பு நிறமாக மாறி தண்ணீர் தேங்கிய பகுதியில் உள்ள அனைத்து செடி, கொடி, மரங்கள் கருகி விட்டன. அந்த அளவுக்கு கழிவுநீரில் விஷத்தன்மை உள்ளது.
கிராமம் முழுதும் நிலத்தடி நீர் விஷமாக மாறுவதற்கு முன்னதாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

