/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில பட்டியலின வளர்ச்சி கவுன்சில்... உதயம்; சிறப்பு கூறு நிதியை கண்காணிக்க முடிவு
/
மாநில பட்டியலின வளர்ச்சி கவுன்சில்... உதயம்; சிறப்பு கூறு நிதியை கண்காணிக்க முடிவு
மாநில பட்டியலின வளர்ச்சி கவுன்சில்... உதயம்; சிறப்பு கூறு நிதியை கண்காணிக்க முடிவு
மாநில பட்டியலின வளர்ச்சி கவுன்சில்... உதயம்; சிறப்பு கூறு நிதியை கண்காணிக்க முடிவு
ADDED : பிப் 22, 2024 07:05 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு கூறு திட்டத்தை கண்காணித்து செயல்படுத்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் பட்டியலின வளர்ச்சி கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில அரசும் தன்னுடைய பட்ஜெட் நிதியில் 15.73 சதவீதம் சிறப்பு கூறு நிதி செலவு செய்ய வேண்டும் என, திட்ட கமிஷன் (நிதி ஆயோக்) வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு கூறு நிதி ஒதுக்கப்படுகிறது.
ஆனால் இந்த தொகை சரியாக செலவு செய்யப்படவில்லை என, அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக சிறப்பு கூறு நிதி வேறு திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்யப்படுகிறது என பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தில் சிறப்பு கூறு திட்டத்தை முழுமையாக கண்காணித்து செயல்படுத்த முதல்வர் ரங்கசாமி தலைமையில் பட்டியலின வளர்ச்சி கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலர், நிதி செயலர், அனைத்து துறை செயலர்கள், திட்ட ஆராய்ச்சி துறை இயக்குனர், அரசு சாரா வல்லுநர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதிராவிடர் நலத் துறை செயலர் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பட்டியலின வளர்ச்சி கவுன்சில் ஆண்டிற்கு மூன்று முறை கூடி பட்டியலின சிறப்பு கூறு திட்டத்தை வரையறை செய்யும். சிறப்பு கூறு வளர்ச்சி திட்ட கொள்கை வடிவமைப்பில் ஆலோசனை வழங்கும். சிறப்பு கூறு திட்டத்தை ஆய்வு செய்து அனுமதி வழங்கும். இந்த பட்டியலின வளர்ச்சி கவுன்சிலில் அனுமதி பெற்ற பிறகு நிதித் துறையானது பட்ஜெட்டில் சிறப்பு கூறு நிதியை இனி ஒதுக்கும்.
கடந்த சட்டசபை கூட்ட தொடரின்போது சிறப்பு கூறு நிதியிலிருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.413 கோடியில் ரூ.166 கோடியை புதுச்சேரி அரசு செலவிடாமல் முடக்கி வைத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., - பா.ஜ., என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூறு நிதி முறையாக செலவிடப்படுவதில்லை என, எம்.எல்.ஏ.கள் குற்றசாட்டுகளை பதிவு செய்தனர்.
இதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிறப்பு கூறு நிதி ரூ. 925 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என, ஆதிராவிடர் அமைப்புகளும் குற்றச்சாட்டை முன் வைத்து போராட்டம் நடத்தின. எனவே அரசு துறைகளில் செலவிடப்படும் சிறப்பு கூறு நிதியை முழுமையாக கண்காணிக்க இந்த பட்டியலின வளர்ச்சி கவுன்சில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆதிராவிடர் நலத் துறை மட்டுமின்றி, 21 அரசு துறைகளுக்கு சிறப்பு கூறு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிதியாண்டில் ஆதிதிராவிடர் நலத் துறைக்கு 196 கோடிக்கும், இதர 21 அரசு துறைகளுக்கு 259 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.