புதுச்சேரியில் பார்க்கிங் பிரச்னை தீர்வு காண நடவடிக்கை தேவை
புதுச்சேரியில் பார்க்கிங் பிரச்னை தீர்வு காண நடவடிக்கை தேவை
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:26 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் அழகிய கடற்கரை, பிரெஞ்சு கால கட்டடங்களை காண ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் வார இறுதி நாட்கள் சுற்றுலா பயணிகளால் மாநிலத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
ஆனால், புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களும் பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதற்கு அடுத்த பிரச்னை பார்க்கிங். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை இடையில் செல்லும் பெரிய வாய்க்காலில், மல்டி லெவல் பார்க்கிங் வசதியை உருவாக்க வேண்டும்.
வாய்க்கால் மீது 3 இடங்களில் இதுபோன்ற பார்க்கிங் அமைப்பை உருவாக்கினால், ஒயிட் டவுன் வரும் அனைத்து கார்களும் இங்கு நிறுத்தப்படும். அது போல், நேரு வீதியில் இடிக்கப்பட்ட பழைய சிறை பகுதியில் முழுக்க முழுக்க வாகனங்கள் மட்டும் நிறுத்தும் மல்டிலெவல் பார்க்கிங் வசதியை உருவாக்க வேண்டும்.
அதன் பிறகு, நேரு வீதியில் அனைத்து வாகனங்களும் நிறுத்த தடை விதிக்க வேண்டும். பொதுமக்கள் நடந்து செல்ல சாலையின் இருபுறமும் 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்க வேண்டும்.
மேலும், நேரு வீதிக்கு வரும் அனைத்து வாகனங்களும், பயணிகளை இறக்கி விட்டு, இடிக்கப்பட்ட பழைய சிறை பகுதியில் புதிதாக உருவாக்கப்படும் மல்டி லெவல் பார்க்கிங்கிற்கு செல்ல வேண்டும். பொருட்கள் வாங்கிய பிறகு, பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனத்தை கொசக்கடை வீதி அல்லது நேரு வீதி வழியாக வெளியே வந்து உரிமையாளரை ஏற்றிக் கொண்டு செல்லும் வகையில் திட்டமிட வேண்டும்.
எதிர்கால புதுச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மல்டி லெவல் பார்க்கிங் வசதியை, போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
