/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய மதுபான கொள்கையை எதிர்த்து போராட்டம்
/
புதிய மதுபான கொள்கையை எதிர்த்து போராட்டம்
ADDED : பிப் 11, 2025 06:00 AM

புதுச்சேரி: புதிய மதுபான தொழிற்சாலை அனுமதியை எதிர்த்து, 18ம் தேதி போராட் டம் நடத்தப்படும் என இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு, கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய மதுபான கொள்கைக்கான முடிவை எடுத்துள்ளது.
புதிய மதுபான கடைகளுக்கு அனுமதி, புதிய தொழிற்சாலைகளுக்கு பூரண அனுமதி, மதுபான விலை ஏற்றம் ஆகிய முடிவுகளை எடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 800 மதுபான கடைகள், 200க்கும் மேற்பட்ட ரெஸ்ட்ரோ பார்கள் உள்ளன.இது, சமூக விரோத குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.
இந்நிலையில், மேலும் புதிய மதுபான கடைகள் திறக்கப்படுவதால், பெரும் கேடு ஏற்படும்.
புதிய மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் திறக்கப்படுவதால், கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.
இதனால், விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் பிரச்னை தலை விரித்தாடும். புதிய மதுபான கொள்கையில் 500 கோடி ரூபாய்க்கு வருமானம் திரட்டி, காமராஜர் கல்வி நிதியுதவி உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு செலவிடுவது அபத்தமானது. காமராஜருக்கு செய்யும் துரோகம்.
மாநிலத்திற்கு கேடு விளைவிக்கும் புதிய மதுபான கொள்கையை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 18ம் தேதி கலால் துறை முன் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை செயலாளர் சேதுசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., நாராகலைநாதன், மாநில குழு உறுப்பினர் அபிஷேகம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா உடனிருந்தனர்.

