அரசு ஒதுக்கீட்டு அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் மாணவர், பெற்றோர் நலசங்கம் கோரிக்கை
அரசு ஒதுக்கீட்டு அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் மாணவர், பெற்றோர் நலசங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2026 02:36 AM
புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பெறப்படும் அரசு ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என மாணவர், பெற்றோர் நலசங்க தலைவர் பாலசுப்ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மாநில கட்டண குழு தலைவருக்கு அனுப்பியுள்ள மனு:
உச்சநீதிமன்ற வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மருத்துவம், பொறியியல் கல்லுாரிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கல்லுாரிகளின் உட்கட்டமைப்புகள், போராசிரியர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகங்களின் தணிக்கை அறிக்கை அடிப்படையில் கல்வி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், தனியார் கல்லுாரிகளில் மொத்தம் உள்ள பாடப்பிரிவுகளில் 100 விழுக்காடு இடங்களில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீடாகவும், 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகவும் உள்ளன. இதனடிப்படையில் கல்வி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால், புதுச்சேரியில் கடந்தாண்டு, 650 மருத்துவ இடங்களில் 242 இடங்கள் மட்டுமே அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டது. எனவே வரும் கல்வியாண்டில் 2026-2029 கல்வி கட்டணங்களை அரசு ஒதுக்கீடு இடங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். மேலும் இம்மாதம் தனியார் மருத்துவ கல்லுாரி 2026-2027 கல்வியாண்டிற்கு 22 லட்ச ரூபாய் ஆண்டு கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இப்படி தனியார் கல்லுாரிகள் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
