புதுச்சேரி : கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மகனை கண்டுபிடித்து தரும்படி தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாணரப்பேட்டை, முருகசாமி தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசுதா, 35; அரவிந்தர் ஆசிரமத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிதியோன், 16; கருவடிக்குப்பம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டதால், மகன் நன்றாக படிக்க வேண்டும் என, கூறி வந்தார்.
இதற்கிடையே, கிதியோன் அதிகமாக மொபைல் போனை பயன்படுத்தி வந்ததால், அதனை ஜெயசுதா கண்டித்தார். கடந்த 5ம் தேதி காலை வழக்கம் போல் ஜெயசுதா வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு வந்தபோது, வீட்டில் கிதியோன் இல்லை. அவர், எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.
அதில், அம்மா எனக்கு இங்கு இருக்க பிடிக்கல. நீங்க எனக்கு பண்ணதெல்லாம் போதும். என் லைப்பை நான் பாத்துக்குறேன். நான் உங்களுக்கு பிறந்திருக்கவே கூடாது. நீங்க எனக்கு செஞ்சதெல்லாம் எப்படியாவது கஷ்டப்பட்டாவது உங்களுக்கு பணமா அனுப்பி விடுகிறேன். என்னை எங்கயும் தேடாதீங்க என எழுதி இருந்தது. வீட்டில் இருந்து அவரது ஆடைகளும் காணமால் போய் இருந்தது.
இதுகுறித்து ஜெயசுதா அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.