பேராசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் மாணவர், பெற்றோர் நல சங்கம் கோரிக்கை
பேராசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் மாணவர், பெற்றோர் நல சங்கம் கோரிக்கை
UPDATED : நவ 19, 2026 05:18 PM
ADDED : நவ 19, 2026 05:16 PM
புதுச்சேரி: மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், பணிபுரியும் ஒப்பந்த பேராசிரியர்களுக்கு, நிலுவை ஊதியத்தை வழங்கிட வேண்டும் என புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலச்சங்கம் வலியுருத்தி உள்ளது.
இது குறித்து, முதல்வர் ரங்கசாமிக்கு, அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது; புதுச்சேரி மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், பல்வேறு பல் மருத்துவத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஒப்பந்தப் பேராசிரியர்கள் வழக்கமான கற்பித்தல் மற்றும் நோயாளிகள் பராமரிப்புப் பணிகளுடன் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காமராஜர் மாலை நேர மருத்துவமனையில் சேவையாற்றுவதுடன், இளங்கலை மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு முதுகலை நீட் பயிற்சியையும் அளித்து வருகின்றனர்.
சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தேசிய பல் மருத்துவ ஆணையத்தின் பதிவேட்டில் பணியாளர்களாகக் காண்பிக்கப்பட்டாலும், இவர்களுக்கு நிரந்தரப் பேராசிரியர்கள் பெறும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, இந்நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கும் தாங்கள், இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
