/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் கல்வி நிதியுதவி கிடைக்காமல் மாணவர்கள்... பரிதவிப்பு; ஒட்டுமொத்தமாக கட்ட சொல்வதால் நெருக்கடி
/
காமராஜர் கல்வி நிதியுதவி கிடைக்காமல் மாணவர்கள்... பரிதவிப்பு; ஒட்டுமொத்தமாக கட்ட சொல்வதால் நெருக்கடி
காமராஜர் கல்வி நிதியுதவி கிடைக்காமல் மாணவர்கள்... பரிதவிப்பு; ஒட்டுமொத்தமாக கட்ட சொல்வதால் நெருக்கடி
காமராஜர் கல்வி நிதியுதவி கிடைக்காமல் மாணவர்கள்... பரிதவிப்பு; ஒட்டுமொத்தமாக கட்ட சொல்வதால் நெருக்கடி
ADDED : நவ 12, 2025 07:19 AM

புதுச்சேரி: சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்கள் காமராஜர் கல்வி நிதியுதவி கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.இப்பிரச்னையில், கவர்னர், முதல்வர் தலையிட்டு உதவ வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காமராஜர் கல்வி உதவி திட்டத்தினை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் கீழ் சென்டாக் மூலம் தனியார் கல்லுாரிகளில் சேர மாணவர்களுக்கு கட்டணத்தை அரசே செலுத்தும்.
அதன்படி எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ரூ.2.25 லட்சம், பி.டெக்., படிப்பிற்கு ரூ.25 ஆயிரம், நர்சிங் படிப்பிற்கு ரூ.8,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தால் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகி வருகிறது. காலத்தோடு வழங்கப்பட்டு வந்த காமராஜர் கல்வி திட்ட நிதியுதவி, கடந்த 2022ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்களுக்கு காமராஜர் கல்வி திட்ட நிதியுதவி இன்னும் வழங்கப்படவில்லை. அதேநேரத்தில், கடந்த 2021ம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022 கல்வியாண்டில் சேர்ந்த இன்ஜினியரிங் உள்ளிட்ட மாணவர்கள் இறுதியாண்டிற்கு வந்துவிட்டனர். சில மாதங்களில் இறுதி செமஸ்டர் எழுதி படிப்பினையே முடிக்க உள்ளனர். ஆனால், இன்னும் காமராஜர் திட்ட நிதியை கல்லுாரிகளுக்கு, அரசு விடுவிக்கவில்லை. அதனால், கல்லுாரி நிர்வாகங்கள் ஓட்டுமொத்த கல்வி கட்டணத்தை ஒரு மாதத்தில் கட்டுமாறு மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நீங்கள் பணத்தை கட்டுங்கள். அரசு கொடுக்கும்போது வாங்கி கொள்ளுங்கள் என, தெரிவித்து வருகின்றன.
இதனால் ஒவ்வொரு இன்ஜினியர் மாணவர்களும் ஒரு லட்சம் வரையிலும், மருத்துவ மாணவர்கள் 9 லட்சம் வரையிலும் திரட்டி கட்ட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களுக்கு அரசே கட்டணத்தை செலுத்தும் என்பதால் தனியார் கல்லுாரிகளும் நம்பிக்கையாக மாணவர்களை சேர்த்தன.
ஆனால் நான்கு ஆண்டுகள் முடியும் தருவாயில் இன்னும் கல்வி நிதியுதவி கிடைக்காததால் கல்லுாரி நிர்வாகங்கள் நிர்வாக செலவு, பேராசிரியர்கள் சம்பளம், ஆய்வக மேம்பாடு என செலவுகளை சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி மாணவர்களிடம் வசூலிக்கும் முடிவுக்கு வந்துவிட்டன.
இந்தாண்டு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் மருத்துவம், இன்ஜினியரிங் மட்டுமின்றி அனைத்து படிப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி தந்து தங்களின் பொருளாதார நெருக்கடியை தளர்த்த வேண்டும்.
இதற்கு கவர்னர், முதல்வர் உதவ வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2003-04ம் ஆண்டு 436 மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது எம்.பி.பி.எஸ்., படிப்பில் 600 பேர், நர்சிங்-596, பி.டெக்., படிப்பில் -4,980 என மொத்தம் 6,176 மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்ட நிதியுதவி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

