/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு சிறப்பு பயிற்சி தேர்வு பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
/
விளையாட்டு சிறப்பு பயிற்சி தேர்வு பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
விளையாட்டு சிறப்பு பயிற்சி தேர்வு பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
விளையாட்டு சிறப்பு பயிற்சி தேர்வு பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 23, 2025 05:21 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கான தேர்வு வரும், 27, ம் தேதி துவங்க உள்ளதாக, இந்திய விளையாட்டு ஆணைய துணை இயக்குனர் ஷ்வேதா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
லாஸ்பேட்டை, இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில், 2025-26ம் ஆண்டிற்கான, பளு துாக்குதல், கோ-கோ, கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி பெற, வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு வரும், 27ம் தேதி துவங்கி, 29,ம் தேதி வரை பயிற்சி மையத்தில் நடக்கிறது.
விண்ணப்ப படிவங்கள் தேர்வு நாள் அன்று காலை 6:00 மணிக்கு, சம்மந்தப்பட்ட பயிற்சியாளர் மூலம் வழங்கப்படும். தேர்வில் கலந்து கொள்ள வரும் விளையாட்டு வீரர்கள், மூன்று புகைப்படங்கள், அசல் மற்றும் நகல் பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்களுடன் அரசு மருத்துவரால் அளிக்கப்பட்ட உடற்தகுதி சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும்.
இதில் பளு துாக்குதல் விளையாட்டு பிரிவில் மையத்தில் தங்கி இருந்தும் இதர விளையாட்டுகளுக்கு, வெளியில் இருந்து வந்தும் பயிற்சி பெறலாம். மாவட்ட, கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் அல்லது மத்திய அரசின் கேந்திர, நவோதயா பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள்.
வயது, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், சேர்க்கைக்கு தகுதி பெறுவர். தேசிய, மண்டலம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் நேரடி சேர்க்கை பெறுவர்.
தனி நபர் விளையாட்டில், 12 முதல் 16 வயது வரையிலான பிரிவில், முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், வயது சரி பார்ப்பு மற்றும் மருத்துவ தகுதி சோதனைக்கு பின் பயிற்சி மையத்தின் தேவைக்கேற்ப சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவர்.
குழு விளையாட்டில், 10 முதல் 16 வயது வரையிலான பிரிவில் மாவட்ட, தேசிய அளவிலான, கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் முதல், இரண்டாம் இடத்தை பெற்றவர்கள் மற்றும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு உடற்தகுதி சோதனைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்கள், பயிற்சி விடுதியில் சேர்க்கைக்கு கருத்தில் கொள்ளப்படுவர்.
சேர்க்கைக்கு முன்னதாக, 3 வாரங்கள் இவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு பின் பள்ளி, கல்லுாரி படிப்பை விடுதியில் இருந்து கொண்டு தொடரலாம்.
விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெறுவோர்க்கு, தினசரி உணவு வகைக்காக, ரூ.300 செலவிடப்படும். ஒரு மாணவருக்கு சீருடை உபகரணங்கள் - ரூ.7 ஆயிரம்; போட்டி வெளிப்பாடு - ரூ. 6 ஆயிரம்; கல்வி செலவு - ரூ.1 ஆயிரம்; மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு செலவினம் - ரூ.10 ஆயிரம் வரை, ஆண்டு ஒன்றுக்கு செலவிடப்படும்.
வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறும் ஒரு மாணவருக்கு, சீருடை, உபகரணங்கள் - ரூ.5 ஆயிரம்; போட்டி வெளிப்பாடு - ரூ.3 ஆயிரத்து 500; மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு செலவினம் - ரூ.8 ஆயிரம் வரை ஆண்டு ஒன்றுக்கு செலவிடப்படும். இது குறித்து தகவல் அறிய அலுவலக வேலை நேரங்களில் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

