/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திறந்தவெளி விளையாட்டு மைதானம் குளமானதால் மாணவர்கள் அவதி
/
திறந்தவெளி விளையாட்டு மைதானம் குளமானதால் மாணவர்கள் அவதி
திறந்தவெளி விளையாட்டு மைதானம் குளமானதால் மாணவர்கள் அவதி
திறந்தவெளி விளையாட்டு மைதானம் குளமானதால் மாணவர்கள் அவதி
ADDED : நவ 13, 2024 08:53 PM

காரைக்கால்; காரைக்கால் விளையாட்டு மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால், மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரைக்கால் பகுதி இளைஞர்களிடையே விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு கடந்த 2016ம் ஆண்டு, காரைக்கால் புறவழிச்சாலை அருகே 15 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தியது.
இதே வளாகத்தில் சர்வதேச தரத்தில் பிரமாண்டமான உள்விளையாட்டரங்கமும் செயல்பட்டு வருகிறது.
இந்த மைதானத்தில் காரைக்கால் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தினமும் மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அரசு சார்பில் சுதந்திர தினவிழா, மலர் கண்காட்சி, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த விளையாட்டரங்கில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
நுாற்றுக் கணக்கான மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த விளையாட்டு மைதானத்தை கடந்த சில ஆண்டுகளாக சரிவர பராமரிக்காததால், செடி கொடிகள் முளைத்து வயல்வெளியாக மாறியுள்ளது.
அரசு விழாக்கள் நடக்கும் நேரத்தில் மட்டும் மைதானம் சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் புதர் மண்டி கிடப்பதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு இடையே பயிற்சியை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு வாரமாக காரைக்காலில் பெய்து வரும் மழையால், திறந்தவெளி மைதானத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் நிற்பதால், மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, மைதானத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றவும், செடி, கொடிகளை அகற்றி மைதானத்தை முறையாக பராமரித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.