/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணைவேந்தரை சிறை பிடித்த மாணவர்கள் நள்ளிரவில் தடியடி நடத்தி கைது செய்ததால் பரபரப்பு
/
துணைவேந்தரை சிறை பிடித்த மாணவர்கள் நள்ளிரவில் தடியடி நடத்தி கைது செய்ததால் பரபரப்பு
துணைவேந்தரை சிறை பிடித்த மாணவர்கள் நள்ளிரவில் தடியடி நடத்தி கைது செய்ததால் பரபரப்பு
துணைவேந்தரை சிறை பிடித்த மாணவர்கள் நள்ளிரவில் தடியடி நடத்தி கைது செய்ததால் பரபரப்பு
ADDED : அக் 11, 2025 01:34 AM

புதுச்சேரி : பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து துணை வேந் தரை சிறை பிடித்த மாணவர்களை நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பல்கலையின், காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர், தனக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக அழுத ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலையிலும், மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்தது.
பல்கலையில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்கலை மானியகுழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திட வலியுறுத் தி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முன்தினம் பல்கலையில், துணைவேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலை நிர்வாகம், மாணவர்களின் கோரிக்கைக்கு எழுத்து பூர்வமாக பதில் அளிக்க மறுத்ததால், மாணவர்களின் போராட்டம் நீடித்தது. நள்ளிரவு 2:00 மணிக்கு பல்கலைக்குள் நுழைந்த காலாப்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி 6 மாணவிகள் உட்பட 24 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், மாணவிகளை மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்று காலை விடுவித்தனர். மாணவர்கள் ஸ்டேஷனிலேயே வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவர்களை போலீசார் அடித்தும், தரதரவென இழுத்து சென்று கைது செய்து வேனில் ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதனைக் கண்டு ஆவேசமடைந்த சக மாணவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டியும், பல்கலை நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பல்கலை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்திய மாணவர்கள், துணை வேந்தர் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்டோர் நேற்று காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அங்கிருந்த மாணவர்களை சந்தித்து விசாரித்தனர்.
பின்னர் டீனை சந்தித்து, நடந்த சம்பவங்களை விசாரித்தார். அதேபோன்று பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்களை சந்தித்து விசாரித்தனர். பின், சீனியர் எஸ்.பி.,யை சந்தித்து கைது செய்யப்பட்ட மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை விடுக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று மதியம், காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மாணவர்களை விடுவிக்காதது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இருப்பினும் நேற்று மாலை வரை மாணவர்கள் விடுவிக்கப்படாததால், பல்கலை வட்டாரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவிவருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் கண்டனம் மாணவர்களை போலீசார் தடியடி நடத்தியும், காலால் உதைத்தும், இழுத்து சென்று கைது செய்ததை எதிர்க்கட்சி தலைவர் சிவா, வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சம்பத், வைத்தியநாதன், சாய்சரவணன்குமார், இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்தபாபு, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது வழக்கின்றி விடுவிக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.