/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தோல்வி அடைந்தால் தளரக்கூடாது; மாணவர்களுக்கு வித்யா ராம்குமார் ' அட்வைஸ்'
/
தோல்வி அடைந்தால் தளரக்கூடாது; மாணவர்களுக்கு வித்யா ராம்குமார் ' அட்வைஸ்'
தோல்வி அடைந்தால் தளரக்கூடாது; மாணவர்களுக்கு வித்யா ராம்குமார் ' அட்வைஸ்'
தோல்வி அடைந்தால் தளரக்கூடாது; மாணவர்களுக்கு வித்யா ராம்குமார் ' அட்வைஸ்'
ADDED : அக் 10, 2025 06:47 AM

புதுச்சேரி; தோல்விகள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசிரியர்கள், அவை வெற்றியின் மதிப்பை உணரவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் உதவுகின்றன என, புதுச்சேரி அரசின், வரதட்சணை தடுப்பு ஆலோசனை குழுவின் சேர்மன் வித்யா ராம்குமார் பேசினார்.
'தினமலர்- பட்டம்' இதழ், வினாடி- வினா போட்டி துவக்க விழாவில் அவர் பேசியதாவது:
வாழ்வில் வெற்றி, தோல்விகள் மாறி, மாறி தான் வரும். வாழ்வில் எவ்வளவு உயரத்தை தொட்டிருப்பவர்கள் கூட ஒரு நாள் தோல்வியை சந்தித்து இருப்பார்கள். தோல்விகள் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசிரியர்கள். அவை வெற்றியின் மதிப்பை உணரவும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் உதவுகின்றன.
தோல்வி அடையும்போது தளர்ந்துவிடக்கூடாது. அதுவும் வாழ்வின் ஒரு பகுதியாக கருதி, அந்த அனுபவத்தை எடுத்துக் கொண்டு நாம் எதிர்கால இலக்கினை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு படிப்பில் மதிப்பெண் குறைந்தால் பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். ஆசிரியர்களும் அறிவுரை கூறுவார்கள்.
அதனை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியில் இருந்து கிடைத்த பாடத்தை படிப்பினையாக கொண்டு, இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டும். அது தான் வாழ்வில் வெற்றியை தரும்.
எனது தாய், என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். படிப்பு தான் எல்லாவற்றையும் தரும். திருமணம் ஆனாலும் யாரையும் சார்ந்து இருக்காமல், சொந்த காலில் நிற்க வேண்டும் என, கூறுவார். அதுதான் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து இந்த அளவிற்கு என்னை உயர்த்தியது.
இரண்டாயிரம் வழக்குகள் போடச் செய்து, குழந்தைகளின் உரிமைக்காக நீதிமன்றத்தில் அழுத்தமாக பதிவு செய்து இருந்தாலும், அனைத்திலும் வெற்றி கிடைத்துவிடாது. சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி தோல்வியும் கிடைக்கும். எதிர்ப்புகள் வரும். ஒத்துழைப்பு இருக்காது.
இதுபோன்ற தோல்வி சூழ்நிலையில் எனக்கு நானே சொல்லிக்கொள்ளுவது ஒன்று தான். இதனை விட்டுவிடவே கூடாது. என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன். இந்த தாரக மந்திரத்தையே நீங்களும் எடுத்து கொண்டு தன்னம்பிக்கையோடு நடைபோடுங்கள்.
'தினமலர்' நாளிதழ் செய்தி சேவையுடன், மாணவர்களுக்கு பட்டம் இதழ் மூலம் அரிய தகவல்களையும் தருகிறது. 'தினமலர்' நாளிதழுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் பேசினார்.