/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்ட கற்றல் கையேடு தயார்
/
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்ட கற்றல் கையேடு தயார்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்ட கற்றல் கையேடு தயார்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்ட கற்றல் கையேடு தயார்
ADDED : செப் 20, 2024 03:37 AM

புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் முதல் முறையாக பொதுத் தேர்வை சந்திக்கவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, முக்கிய வினாக்கள் அடங்கிய கற்றல் கையேடு வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 422 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 736 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.60 லட்சம் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இருப்பினும், புதுச்சேரிக்கு என தனி பாடநுால் கழகம் இல்லாததால், தமிழக பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2014-15 ம் கல்வியாண்டு அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடைசியாக கடந்த 2018-19ம் கல்வியாண்டில் 5ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதை தொடர்ந்து, கடந்த 2023-24 கல்வியாண்டில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1 வகுப்புகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன.
மீதமிருந்த 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு இந்த 2024-25 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இதனால், தேர்ச்சி பெறமுடியுமா? தேர்ச்சி பெற்றாலும் கூடுதல் மதிப்பெண் கிடைக்குமா என்ற அச்சம் மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவியது.
இதனை அறிந்த அரசு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு, சி.பி.எஸ்.பி., பாடத்திட்டத்தில் சிறந்த வல்லுனர்களை கொண்டு அனைத்து பாடங்களுக்கும் முக்கிய வினாக்கள் அடங்கிய கற்றல் கையேடு தயார் செய்துள்ளது.
இந்த கையேடு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு தலா ஒரு தொகுப்பாகவும், சமூகவியல் பாடத்திற்கு வரலாறு, புவியியல் ஒரு தொகுப்பாகவும், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் ஒரு தொகுப்பு என மொத்தம் 6 தொகுப்புகள் புத்தகங்களாக ரூ.25 லட்சம் மதிப்பில் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த கற்றல் கையேட்டை, இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு நேரடியாக வழங்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.