/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
/
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
ADDED : டிச 12, 2025 05:35 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று காலை திடீரென சாலையில் 'மெகா' பள்ளம் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, நகரப் பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் நகரின் முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தை சிக்கி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், காந்தி வீதி - முத்துமாரியம்மன் கோவில் வீதி சந்திப்பு அருகில் நேற்று காலை திடீரென 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள், பள்ளத்தை பார்வையிட்டு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியில் 10 அடி அகலத்திற்கும், 15 அடி நீளத்திற்கும் உள்பகுதி வெற்றிடமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, பள்ளம் ஏற்பட்ட சாலையை உடைத்து சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் திடீர், திடீரென மெகா பள்ளங்கள் ஏற்பட்டு வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

