/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தால திடீர் புயல்:40, 000 ஓய்வூதியர்கள் போர்க்கொடி
/
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தால திடீர் புயல்:40, 000 ஓய்வூதியர்கள் போர்க்கொடி
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தால திடீர் புயல்:40, 000 ஓய்வூதியர்கள் போர்க்கொடி
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தால திடீர் புயல்:40, 000 ஓய்வூதியர்கள் போர்க்கொடி
ADDED : பிப் 20, 2025 06:26 AM

புதுச்சேரி: புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த நிரந்தர மருத்துவ படித்தொகை ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு ஓய்வூதியர்கள் மத்தியில் புயலை கிளப்பியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த பென்ஷன்தாரர்கள், குடும்ப பென்ஷன்தாரர்கள் மத்திய அரசின் சி.ஜி.எச்.எஸ்., மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால், ஓய்வூதியர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 மருத்துவப்படி இனி நிறுத்தப்படும் என, அறிவித்திருப்பது, மாநிலத்தில் உள்ள 46 ஆயிரம் ஓய்வூதியர்கள் மத்தியில் பெரும் புயமலை கிளப்பியுள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன பிரச்னை
மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை புதுச்சேரி அரசு சரிவர கையாளவில்லை. திட்டத்தின் சிறப்பு, பலன்கள் குறித்து ஓய்வூதியர்களிடம் விளக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி ஓய்வூதியதாரர்களுக்கு அமல்படுத்தப்படும் இத்திட்டம், காரைக்கால், மாகி மற்றும் ஏனாமில் அமல்படுத்தவில்லை. இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவப்படி வழங்கப்படும். அவர்கள் விரும்பினால், தனியாக பிரிமிய தொகை கட்டி சேரலாம் என அறிவித்திருப்பது, ஓய்வூதியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை போன்று இந்த பிராந்தியங்களில் நலவழி மையங்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்திருந்தால் குழப்பம் ஏற்பட்டு இருக்காது. அதனை அரசு செய்ய தவறிவிட்டது.
இரண்டாவதாக ஓய்வூதியர்களுக்காக புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரியில் 3 டாக்டர்களும் ஒரு நல்வழி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சென்று டாக்டரை ஆலோசித்து மாத்திரைகளை பெற்று செல்லலாம்.
ஆனால் மாநிலத்தில் 40 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ள சூழ்நிலையில் இந்த ஒரு நலவழி மையம் போதுமா என்ற கேள்வியை ஓய்வூதியர்கள் முன் வைக்கின்றனர்.
மூன்றாவதாக தற்போது வந்துள்ள மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு முன்னதாகவே ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் அனைவரும் சேர வேண்டும். ரூ. 5 லட்சம் காப்பீடு கிடைக்கும் என பிரதமரே அழைத்த சூழ்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த பல ஆயிரம் ஓய்வூதியர்கள் இணைந்தனர்.
ஆயுஷ்மான் திட்டத்தில் சேர்ந்த பிறகு பிற காப்பீடு இணையக்கூடாது என்று விதிமுறை இருக்கிறது. அப்படி இருக்கும்போது எங்கள் அனுமதியே இல்லாமல், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்தது ஏன். ஆயுஷ்மான் திட்டம் அளவிற்கு நன்மைகள் கிடைக்குமா என்று ஓய்வூதியர்கள் கேள்வியுடன் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.
ஓய்வூதியர்கள் எழுப்பும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. யாரிடம் கேட்பதும் என்றும் தெரியவில்லை. இதன் காரணமாக மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் கடும் குழப்பம் எதிர்ப்பும் ஒன்று சேர புதுச்சேரியில் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் 75 நகரங்களில் 460 நலவாழ்வு மையங்கள் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கென மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 41.2 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த சுகாதார திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற தரமான சிகிச்சை புதுச்சேரி ஓய்வூதியர்களுக்கும் கிடைக்கும்.
ஆனால், புதுச்சேரியில் இந்த திட்டம் குறித்த நன்மை ஓய்வூதியர்களிடம் சரியாக கொண்டு செல்லப்படவில்லை என்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள ஓய்வூதியர்கள், ஓய்வூதிய சங்கங்கள் அனைத்தையும் அழைத்து அரசு பேச வேண்டும். அவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளித்து இத்திட்டத்தை செயல்படுத்த கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.