UPDATED : நவ 14, 2026 06:52 PM
ADDED : நவ 14, 2026 06:52 PM

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் அதிகாலை 5:00 மணி. புதுச்சேரியே இன்னும் போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் அந்த இதமான குளிரில், மொரட்டாண்டி டோல்கேட் பகுதி மட்டும் சுறுசுறுப்பாகக் கண் விழிக்கிறது.
50-க்கும் மேற்பட்டோர் வண்ணமயமான சைக்கிள்களுடன் அங்கே ஆஜராகிறார்கள். சுவாரஸ்யம் என்னவென்றால், இவர்களில் பலருக்கும் ஒருவரை ஒருவர் முன்னபின்ன தெரியாது.
உடல்நலம் குறித்த குட்டி உரையாடல்கள், உற்சாகமான சிரிப்பொலிகளுக்குப் பிறகு, சரியாக காலை 6:00 மணிக்கு சைக்கிள் பெடல்களை அழுத்தத் தொடங்குகிறார்கள்.
ஆரோவில்லின் பசுமை போர்த்திய கிராமத்துச் சாலைகளில் 20 கிலோமீட்டர் வரை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, 8 மணிக்கெல்லாம் மீண்டும் டோல்கேட் திரும்புகிறார்கள்.
முகம் தெரியாத இத்தனை பேரையும் இன்ஸ்டாகிராம் வழியாக ஒன்றிணைத்து, இந்த சண்டே சைக்கிளிங் பயணத்தை வழிநடத்தி வருபவர் கோச் இளங்கோ. எம்.பி.ஏ., பட்டதாரியான இவரிடம், என்ன சார், அதிகாலையிலேயே இப்படி ஒரு எனர்ஜி? எனக் கேட்டதுமே உற்சாகமாக ேசத் தொடங்கினார்.
இந்த ஐடியா எப்படி சார் உங்களுக்கு வந்துச்சு?
நாம எல்லாருமே குடும்பத்துக்காக ஓடி ஓடி உழைக்கிறோம். ஆனா, நம்ம உடம்பைக் கவனிக்கிறோமா? உடம்பை பிட்டா வச்சுக்கணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கு. ஆனா, தனியா எழுந்து போறதுக்குத்தான் சோம்பேறித்தனம். சரி, எல்லாரையும் ஒண்ணு சேர்த்து ஒரு குரூப்பா சைக்கிள் ஓட்டினா என்னன்னு தோணுச்சு.
அப்படி 4 வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம். இன்னைக்கு 50-க்கும் மேற்பட்டவங்க வாராவாரம் தவறாம வர்றாங்க. இது ஒரு பெரிய குடும்பம் மாதிரி ஆகிடுச்சு..
ஆரோவில் ரூட்ல போற அனுபவம் எப்படி இருக்கும்?
அதை வார்த்தையில விவரிக்க முடியாதுங்க. 6 மணிக்கு மொரட்டாண்டி டோல்கேட்ல இருந்து கிளம்பினோம்னா, ஆரோவில் சுத்தியிருக்கிற பசுமையான கிராமத்து ரோடுகள்ல பயணிப்போம். அந்த அதிகாலைக் குளிர் காத்து, பச்சைப் பசேல் மரங்கள், பறவைகளோட சத்தம்னு வேற ஒரு உலகத்துக்கே போன மாதிரி இருக்கும். 20 கிலோமீட்டர் துாரம் போறதே தெரியாது. 8 மணிக்கெல்லாம் பாதுகாப்பா திரும்ப டோல்கேட் வந்து சேர்ந்துருவோம்.
வெறும் சைக்கிள் ஓட்டுறது மட்டும்தானா, வேற ஏதாவது ஸ்பெஷல் இருக்கா?
கண்டிப்பா இருக்கு. வெறும் உடற்பயிற்சியோட நின்னுடக் கூடாதுன்னு, நாங்க போற இடங்கள்ல மரக்கன்றுகளையும் நட்டு வைப்போம். இயற்கைக்கு நம்மால முடிஞ்ச ஒரு சின்ன நன்றிக்கடன் அது. அதுமட்டுமில்லாம, சைக்கிள் ஓட்டும்போது தாகம் எடுத்தா குடிக்கிறதுக்கு தண்ணி பாட்டிலையும் நாங்களே கொடுத்துருவோம்.
இதுல புதுசா யாராவது இணையணும்னா என்ன பண்ணணும்? கட்டணம் ஏதாவது உண்டா?
அட, இதுக்குப் போய் காசா? முற்றிலும் இலவசம் தாங்க. ஆனா, முன்பதிவு ரொம்ப அவசியம். வாராவாரம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியா வழியா பதிவு பண்றவங்க, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மொரட்டாண்டி டோல்கேட்டுக்கு வந்தா போதும்.
இங்க வந்தா நல்ல பிட்னஸ் கிடைக்கும், முகம் தெரியாத புது நண்பர்கள் கிடைப்பாங்க, சுத்தமான காத்து, இயற்கை மேல ஒரு புரிதல்னு எல்லாமே கிடைக்கும் என்கின்றார் உற்சாகமாக...
நீங்களும் சண்டே சைக்கிளிங்கிற்கு ரெடியா இருந்தா, இந்த நம்பருக்கு ஒரு கால் அல்லது மெசேஜ் தட்டிவிடுங்க... 8098367259...
