/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊசுடு ஏரியில் அதுவும் போச்சு... படகு சவாரி இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
ஊசுடு ஏரியில் அதுவும் போச்சு... படகு சவாரி இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஊசுடு ஏரியில் அதுவும் போச்சு... படகு சவாரி இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஊசுடு ஏரியில் அதுவும் போச்சு... படகு சவாரி இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 06, 2025 06:52 AM

புதுச்சேரியின் மிகப்பெரிய நீர் ஆதாரமான ஊசுட்டேரி 800 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழக பகுதியிலும், 390 ஹெக்டேர் நில பரப்பு புதுச்சேரியில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊசுட்டேரி இயற்கையுடன் இணைந்த பகுதி என்பதால், ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து ஏரியில் தங்கி செல்கிறது.
மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பூ நாரை, உண்ணிக்கொக்கு, கரண்டிவாயன், காட்டு வாத்து, புள்ளி மூக்கு வாத்து, கருநீர்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் கூழைக்கடா உள்ளிட்ட 250க்கும் அதிக வகையிலான 10 ஆயிரம் பறவைகள் ஆண்டு தோறும் ஊசுட்டேரிக்கு வந்து செல்கின்றன.
கடந்த 2008 ம் ஆண்டு புதுச்சேரி அரசு ஊசுட்டேரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க பத்துக்கண்ணு சாலையோரம் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடல் போல் பரந்து விரிந்து காணப்படும் ஏரியின் அழகையும், ஆங்காங்கே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மண் திட்டுகளில் வெளிநாட்டு பறவைகள் இறை தேடும் அழகை காண, சுற்றுலா வளர்ச்சி கழகம் (பி.டி.டி.சி.,) மூலம் ஊசுட்டேரியில் படகு சவாரி இயங்கி வந்தது.
இந்த படகு குழாமிற்கு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை வார இறுதி நாட்களில் அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து ஆளும்கட்சி பிரமுகர், பத்துக்கண்ணு அருகே படகு குழாமை துவங்கினார். இந்த குழாமிற்கும் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கினர்.
இந்நிலையில், ஏரியில் படகுகள் இயக்குவதால், சுற்றுச்சூழல் பாதிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆளும் கட்சி பிரமுகரின் படகு குழாம் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாம் மட்டும் இயங்கி வந்த நிலையில், மூன்று வாரங்களுக்கு முன், வனத்துறையினர் திடீரென அனுமதி பெறாத காரணத்தினால் சுற்றுலா வளர்ச்சி கழகம் படகுகள் இயக்க தடை விதித்துள்ளனர்.
சுற்றுலா மற்றும் வனத்துறை போட்டா போட்டி காரணமாக ஊசுடு ஏரியில் படகுகள் இயக்கப்படாததால், சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.