UPDATED : செப் 15, 2026 06:13 PM
ADDED : செப் 15, 2026 06:02 PM
புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., - காங்., - இந்திய கம்யூ., - தி.மு.க., - நா.த.க., என, 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த பொதுத் தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில், முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதியில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானது. இத்தொகுதிக்கு அடுத்த மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதில், என்.ஆர்.காங்., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., சார்பில் சேது செல்வம் களமிறக்கப்பட்டு, தேர்தல் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதேபோல், தமிழகத்தில், த.வெ.க., அரசிற்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூ., கட்சி, மாநில செயலாளரான சலீமை வேட்பாளராக அறிவித்து கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில், கார்த்திக்குமாரி போட்டியிடுவார் என, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை பனையூரில், த.வெ.க., பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை சந்தித்த புதுச்சேரி காங்., நிர்வாகிகள் ஆதரவு கேட்டு கடிதம் வழங்கினர். அதை தொடர்ந்து நேற்று மதியம் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளராக விநாயகத்தை காங்., கட்சி அறிவித்துள்ளது. இதனால், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
