
புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கல்வித் துறையில் பணியாற்றும் கவுரவ ஆசிரியர்கள், பால சேவிக்காக்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கண்டன ஊர்வலம் நடந்தது.
கம்பன் கலையரங்கம் அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு, அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் சேஷாச்சலம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி, பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிரில் நிக்கோலஸ், பொற்செழியன், ஹரிதாஸ், ராஜேந்திரன், மோகன்தாஸ், ஜனார்த்தனன், மாணிக்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புஸ்சி வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்ற ஊர்வலத்தை மாதா கோவில் அருகே பெரியக்கடை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஊர்வலமாக சென்றவர்கள் அங்கேயே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.