ஆசிரியர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் பேராசிரியர் ஞானசம்பந்தன் 'அட்வைஸ்'
ஆசிரியர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் பேராசிரியர் ஞானசம்பந்தன் 'அட்வைஸ்'
ADDED : செப் 20, 2026 05:38 AM
புதுச்சேரி: ஆசிரியர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என, பேராசிரியர் ஞானசம்பந்தன் ஆலோசன வழங்கினார்.
புதுச்சேரியில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த கருத்தரங்கத்தில் அவர் பேசியதாவது:
ஆசிரியர்களாகிய நாம் ஓடுகிற ஓட்டத்தை ஓடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். நமக்கு கிடைக்கும் விருதை பொருத்தவரை ஒரு அங்கீகாரம். விருது என்பது, அதிகம் உழைப்பதற்காக தரப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, இதுவரைக்கும் வாங்குவதற்காகவும், இனிமேல் வாங்கியதை பாதுகாப்பதற்காகவும் நாம் வாழ்க்கையில் பயணப்பட வேண்டும்.
வாழ்க்கையில நமக்கான எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அதை எடுத்து கொண்டு பயணத்தை தொடர வேண்டும். பள்ளியில் எத்தனையோ பொறுப்புகளை ஆசிரியர்கள் பார்த்து வருகின்றனர். முதலில், பெரிய அங்கீகாரங்கள் எல்லாம் நமக்கு கிடைக்காது. நம்முடன் இருப்பவர்கள் பாராட்டுவார்களா என தெரியாது. ஆனால், சின்ன சின்ன கஷ்டங்கள் நமக்கு வரத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஆயிரம் உபாதைகள் இருந்தாலும், அவர்களின் பிள்ளைகளுக்கே உடல் நிலை சரியில்லை என்றாலும் கூட, ஆசிரியர்கள் அன்றைக்கு விடுப்பு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அதே வகுப்பில், ஒரு பிள்ளைக்கு சின்ன தலைவலி இருந்தால் கூட துாக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வார்கள். அது தான் ஆசிரியரின் உன்னத பணி. அந்த பணியில் நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.
நமக்கு சின்ன சின்ன கஷ்டங்கள், மனவருத்தங்கள், உடல் பாதைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம் வராமல் இருக்காது. அவற்றையெல்லாம் சமாளிப்பதுதான் வாழ்க்கை.
ஆசிரியர்கள் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்ள யோகா வகுப்பிற்கு போகலாம். அங்கேயும் டென்ஷனுடன் யோகா செய்யக் கூடாது. முக்கியமாக டென்ஷன் கூடவே கூடாது.
சாலையில் சிக்னல் மாறுவதற்குள் சில பேர் செத்து பிழைத்திருப்பார்கள். அவ்வளவு டென்ஷன் இருக்கும். அப்படி விதிமுறைகளை மீறி போய் நாம் என்ன செய்ய போகிறோம். ஒண்ணும் பண்ண முடியாது. நிதானமாக இருக்க வேண்டும்.
நம்மை நாம் எப்போதும் புதுமையாக வைத்துக்கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
