ஆம்னி பஸ் சென்சார் போர்டில் தொழிற்நுட்ப கோளாறு: கடலுார் சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஆம்னி பஸ் சென்சார் போர்டில் தொழிற்நுட்ப கோளாறு: கடலுார் சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
UPDATED : ஆக 23, 2026 09:40 PM
ADDED : ஆக 23, 2026 07:52 PM

அரியாங்குப்பம்: ஆம்னி பஸ் சென்சார் போர்டில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறால் பஸ்சை இயக்க முடியாமல் போனதால், கடலுார் சாலையில் 5 மணி நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவித்தனர்.
கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கடலுார் வழியாக புதுச்சேரி வந்த தனியார் ஆம்னி பஸ், நோணாங்குப்பம் பாலம் அருகே நேற்று காலை 6:30 மணியளவில் வந்த போது திடீரென பஸ் சாலையில் நடுவே நின்றது. சென்சார் போர்டில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறால், டிரைவரால் பஸ்சை இயக்க முடியாமல் போனது.
உடனடியாக பஸ்சில் பயணம் செய்தவர்களை இறக்கி மாற்று பஸ் மூலம் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரியில் யூ.டி.சி., தேர்வு எழுத சென்றவர்கள் அவ்வழியாக கடந்து செல்ல முடியாமல் சிக்கி தவித்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், வெளியூர்களுக்கு சென்ற பொதுமக்களும், வெளி மாநிலங்களில் இருந்து தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளும், நோணாங்குப்பத்தில் உள்ள அரசு படகு குழாம் மற்றும் தனியார் படகு குழாமிற்கு சென்ற சுற்றுலா பயணிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
தகவலறிந்த, கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்தரி மற்றும் போலீசார் அங்கு சென்று, நோணாங்குப்பம் பழைய பாலம் வழியாக வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். ஒரே நேரத்தில் மாற்று பாதையில் திருப்பி விட்டதால், அந்த பாலத்திலும், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ராமு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் அங்கு சென்று, ஆம்னி பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசாருடன் உதவி செய்தனர். அதனை தொடர்ந்து, பஸ் சென்சார் போர்டில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறை சரி செய்ய, சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து டெக்னீஷியன்கள் வரவழைக்கப்பட்டு, பஸ்சை சாலையில் இருந்து 12 மணிக்கு பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் நின்ற ஆம்னி பஸ்சின் தொழிற்நுட்ப கோளாறை சரிசெய்ய டெக்னீஷியனை காலம் கடத்தி வரவழைத்தது, பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் வாகனத்தை நிறுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கேரளாவை சேர்ந்த பஸ் டிரைவர் சானுலால், 45, மீது கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
