போக்குவரத்து நெரிசல் குறித்து தொழில்நுட்ப குழு கள ஆய்வு
போக்குவரத்து நெரிசல் குறித்து தொழில்நுட்ப குழு கள ஆய்வு
ADDED : மே 27, 2026 03:10 AM

புதுச்சேரி: ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்படி, தொழில் நுட்பக் குழுவினர், புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் முக்கிய இடங்களில், கள ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான போக்குவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின் படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், புதிய திட்டங்கள் மற்றும் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகளை முன் வைத்து வரும் பொறியாளர் மனுநீதி தலைமையிலான குழுவினர், புதுச்சேரி முழுதும் போக்குவரத்து ஆய்வு மேற்கொள்வதற்கான அனுமதியை, போக்குவரத்து எஸ்.பி., ரச்சனா சிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பெற்றனர்.
சந்திப்பின் போது, ல.ஜ.க., பொதுச் செயலாளர் பிரபாகரன், உயர் அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, பொறியாளர் மனுநீதி தலைமையிலான தொழில் நுட்பக் குழுவினர், புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள முக்கிய இடங்களில், கள ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, சிவாஜி சிலை சந்திப்பு, மரப்பாலம் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில், வாகன ஓட்டம், சிக்னல் நேர ஒழுங்குகள், சாலை அகலம், வாகன திருப்பங்கள் மற்றும் பொது மக்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
எதிர்காலத்தில் புதுச்சேரியில் ஸ்மார்ட் டிராபிக் சிஸ்டம், சிக்னல் ஒருங்கிணைப்பு, மாற்றுப்பாதை திட்டங்கள், நெரிசல் குறைப்பு தொழில் நுட்பங்கள் போன்ற புதிய முயற்சிகளை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி நகரின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி, மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக் கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
