கடற்கரையில் மின் விளக்கு அமைக்க டெண்டர் புதிய தகவல் வெளியாகியுள்ளது
கடற்கரையில் மின் விளக்கு அமைக்க டெண்டர் புதிய தகவல் வெளியாகியுள்ளது
ADDED : செப் 28, 2026 09:23 PM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில், புதிய மின்விளக்கு கம்பங்கள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை கடற்கரை சாலையில், மின்விளக்கு கம்பம் சாய்ந்து சிறுவன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மின் துறை அதிகாரிகள் கடற்கரை சாலையில் உள்ள மின் விளக்கு கம்பங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில், மின்விளக்கு கம்பம் தொடர்பாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதன்படி கடந்த 2011ம் ஆண்டு சுற்றுலா துறை மூலம் டெண்டர் கோரப்பட்டு, ரூ1.23 கோடி செலவில் மின் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டன. புதுச்சேரியை சேர்ந்த காண்ட்ராக்டர் மொத்தமாக 63 விளக்குகளை அமைத்தார். அப்போது அதன் ஆயுட்காலம் பத்தாண்டுகள் என தெரிவிக்கப்பட்டிருந்து.
முதலில் மின் துறை பராமரிப்பில் இருந்த விளக்குகள் பின் உள்ளாட்சி அமைப்புகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஆயுட்காலம் முடிந்ததால், உள்ளாட்சி துறை மூலம் கடற்கரை சாலையில் உள்ள 110 மின் அலங்கார மின் கம்பங்கள் மற்றும் ஒயிட் டவுன் பகுதியில், மின் கம்பங்களை மாற்றுவதற்காக ரூ.6.38 கோடியில் டெண்டர் கோரப்பட்டது.
அந்த டெண்டர் 90 நாட்களுக்குள் திறந்திருக்க வேண்டும். ஆனால், அப்போது சட்டசபை பொது தேர்தல் வந்ததால், அந்த டெண்டர் காலாவதியானது. இதனை தொடர்ந்து, மீண்டும் இரண்டாவது முறையாக டெண்டர் விடப்பட்டது. டெண்டர் பெரும் காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.
இந்த டெண்டர் விரைவில் திறக்கப்பட்டு பணிகள் துவக்கபடும். அதற்குள் மின் கம்பம் சாய்ந்து சிறுவன் இறந்த துயர சம்பவம் நடந்தது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
