தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., யார்? இன்று மதியம் முடிவு தெரியும்
தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., யார்? இன்று மதியம் முடிவு தெரியும்
UPDATED : அக் 08, 2026 08:39 PM
ADDED : அக் 08, 2026 07:59 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மதியத்திற்குள் இத்தொகுதியின் எம்.எல்.ஏ., யார் என்பது தெரிந்துவிடும்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்த், காங்., விநாயகம், தி.மு.க., சேதுசெல்வம், இந்திய கம்யூ., சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டயில் உள்ளனர். 6ம் தேதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது.
இந்தத் தேர்தலில், ஓட்டளிக்க மொத்தம் 26,921 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில், 10,056 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21,756 பேர் ஓட்டளத்துள்ளனர். 31 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப் பதிவு நடந்தது.
லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் இன்று காலை 8:00 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதலில் தபால் ஓட்டுகளும், அடுத்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் நான்கு சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. முதல் சுற்றில் 8, இரண்டாம் சுற்றில் 8, மூன்றாம் சுற்றில் 8 என முதல் மூன்று சுற்றுகளில் 24 ஓட்டுச் சாவடிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.
மீதமுள்ள 7 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் நான்காம் சுற்றில் இறுதியாக எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒரே மணி நேரத்திலேயே அதாவது காலை 9:00 மணிக்கு யார் முன்னணியில் இருக்கிறார் என்ற முதல்கட்ட நிலவரம் வெளிப்படையாகத் தெரிந்துவிடும்.
அதனைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை வேகமெடுத்து இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அதாவது காலை 10:00 மணிக்கு தட்டாஞ்சாவடியில் வெற்றி மகுடம் சூடப்போவது யார் என்பதும் மதியம் 12 மணிக்குள் தொகுதி எம்.எல்.ஏ., யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும்.
அனுமதி நேரம்:: அரசியல் கட்சி முகவர்கள் காலை 7:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் படிவம்–18 வைத்திருப்போர் மட்டுமே ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
முகவர்கள் தங்களுடன் ஓட்டுப்பதிவு நாளுக்கான வழங்கப்பட்ட படிவம் 17 C-ன் நகல், பேனா, பென்சில் மற்றும் வெள்ளை காகிதம், நோட்பேட் மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணும் மையத்திற்குள் மொபைல்போல் அல்லது வேறு எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் கொண்டு வரக் கண்டிப்பானத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதியின் ஒட்டுமொத்த ஓட்டுப்பதிவு 80.81 சதவீதமாக இருந்தாலும், 19.19 சதவீதம் பேர் ஓட்டுப்போடவில்லை. அதாவது, தொகுதி முழுதும் மொத்தம் 5,165 வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வரவில்லை.
இந்த ஓட்டுகள் எந்த வகையில் பாதிப்பினை ஏற்படுத்த உள்ளது என்று அரசியல் கட்சியினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
