தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 80.81 சதவீதம் ஓட்டுப்பதிவு
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 80.81 சதவீதம் ஓட்டுப்பதிவு
UPDATED : அக் 07, 2026 04:46 AM
ADDED : அக் 06, 2026 08:08 PM

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 80.81 சதவீதம் ஓட்டுப்பதிவாகி உள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபை இடைத்தேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. என்.ஆர்.காங்., சார்பில், அசோக் ஆனந்த்; காங்., விநாயகம், தி.மு.க., சேதுசெல்வம்; இந்திய கம்யூ., சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில், 12 ஆயிரத்து 575 ஆண் வாக்காளர்கள், 14 ஆயிரத்து 341 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 26 ஆயிரத்து 921 பேர் உள்ளனர்.
ஓட்டுப்பதிவு நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது. ஓட்டுப்பதிவிற்காக 31 ஓட்டுச்சாவடிகளில், 46 கன்ட்ரோல் யூனிட், 46 பேலட் யூனிட், 48 வி.வி., பாட் இயந்திரம் என, 140 ஓட்டு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதில், காலை 9:00 மணிக்கு 19:20 சதவீத ஓட்டுகள் பதிவானது. 11:00 மணிக்கு 39.16 சதவீதம், மதியம் 1:00 மணிக்கு 56.27 சதவீதம் பதிவானது.
பிற்பகல் 3:00 மணிக்கு 68.91 சதவீதம், மாலை 5:00 மணிக்கு 78.83 சதவீதம் என்ற உச்சத்தை எட்டியது. இறுதியாக 80.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
பொதுமக்கள் காலை முதல் மாலை வரை வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டுப்பதிவு செய்தனர்.

ஓட்டுசாவடிக்கு வர இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட 67 முதியவர்கள், 40 சதவீதத்திற்கும் அதிகமான ஊனம் கொண்ட 37 மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று தேர்தல் துறையினர் ஓட்டு பதிவு செய்தனர்.
