தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது: வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது: வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு
ADDED : அக் 02, 2026 08:44 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களத்தில் 6 அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் என, 11 பேர் போட்டியிடுகின்றனர்.
கட்சித் தலைவர்கள் தட்டாஞ்சாவடியில் முகமிட்டு தீவிர ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டதுடன், வேட்பாளர்களும் தெருத் தெருவாக ஆதரவு திரட்டினர்.
வரும் 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் முடிந்த பிறகு ஓட்டுப்பதிவு முடியும் வரை, வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் கட்சியினரும் மாதிரி நடத்தை விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி பிரசாரம் செய்யக் கூடாது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் முக்கியக் கட்டுப்பாடுகள்:
நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், சாலையோரக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பாதயாத்திரைகள் மற்றும் பைக் பேரணிகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள், லவுட்ஸ்பீக்கர்கள் மற்றும் மெகாபோன்களை இயக்கக் கூடாது.
தட்டாஞ்சாவடி தொகுதியின் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் அல்லாத பிற அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பிரசார ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்ய லாட்ஜ்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் காவல்துறையினரும் தேர்தல் அமலாக்கக் குழுவினரும் தீவிர தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விளம்பரக் கட்டுப்பாடு:
தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், வானொலி, திரையரங்குகள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், பேட்டிகள் அல்லது விவாதங்களை ஒளிபரப்பக் கூடாது. சமூக ஊடகங்கள் வழியாக கட்டண விளம்பரங்கள், எஸ்.எம்.எஸ்., மற்றும் குரல் அழைப்புகளை அனுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அக்., 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட மாவட்ட ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் முன்அனுமதி கட்டாயமாகும்.
கருத்துக்கணிப்புகளுக்குத் தடை:
பிரசாரம் நிறைவடைந்தது முதல் ஓட்டுப்பதிவு முடியும் வரை, அச்சு அல்லது காட்சி ஊடகங்கள் வாயிலாக முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதோ, காட்சிப்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.
தேர்தல் நாளன்று வேட்பாளருக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவருக்கு ஒரு வாகனம் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கிய அசல் அனுமதிச் சீட்டை வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாக்காளர்களை அழைத்து வர வாகனங்களைப் பயன்படுத்துவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஓட்டுச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே வேட்பாளர்களின் வாக்குச்சாவடி உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதில் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மற்றும் இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கட்சி கொடிகள், பதாகைகள் அல்லது சின்னங்கள் காட்சிப்படுத்தப்படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
