UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:08 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது.
புதுச்சேரி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் அசோக் ஆனந்த், தி.மு.க., சேதுசெல்வம், காங்கிரஸ் விநாயகம், இந்திய கம்யூ., சலீம் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஓட்டுப்பதிவு இன்று 6ம் தேதி காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடக்கிறது. தேர்தலில் 12 ஆயிரத்து 575 ஆண் வாக்காளர்கள், 14 ஆயிரத்து 341 பெண் வாக்காளர்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 26 ஆயிரத்து 921 வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்ற உள்ளனர்.
31 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 46 கன்ட்ரோல் யூனிட், 46 பேலட் யூனிட், 48 வி.வி., பாட் இயந்திரம் என 140 ஓட்டு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் ஸ்ட்ராங் ரூமில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் நேற்று மாலை 4:00 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஓட்டுச்சாவடிகளில் 700க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 9ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
