தட்டாஞ்சாவடி ரங்கசாமியின் அசைக்க முடியாத கோட்டை: மீண்டும் என்.ஆர். காங்., வெற்றியால் நிரூபணம்
தட்டாஞ்சாவடி ரங்கசாமியின் அசைக்க முடியாத கோட்டை: மீண்டும் என்.ஆர். காங்., வெற்றியால் நிரூபணம்
UPDATED : அக் 10, 2026 05:28 AM
ADDED : அக் 10, 2026 01:57 AM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., வெற்றி மூலம் இத்தொகுதி முதல்வர் ரங்கசாமியின்அசைக்க முடியாத கோட்டை என மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
தட்டாஞ்சாவடி தொகுதி யின் தேர்தல் வரலாற்றுப் பக்கம் 1974ல் தொடங்கியது. முதல் தேர்தலில் காங்., வேட்பாளராக களம் கண்ட பெத்தபெருமாள் அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து 1977, 1980, 1985 ஆகிய சட்டமன்ற தேர்தல்களிலும் அவரே வெற்றி பெற்று, தொகுதியின் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தார்.
1990ல் ஜனதா தளம் சார்பில் பெத்தபெருமாள் போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து முதன்முறையாக இளைஞரான ரங்கசாமி களம் கண்டார். அந்த முதல் முயற்சியில் ரங்கசாமி தோல்வியை தழுவினாலும், அதுவே அவரது அரசியல் திருப்புமுனைக்கு வித்திட்டது.
அடுத்தடுத்த தேர்தல்களில் நிலைமை தலைகீழாக மாறியது. 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆகிய 4 தொடர் தேர்தல்களில் காங்., வேட்பாளராகப் போட்டியிட்ட ரங்கசாமி, தொடர் வெற்றிகளைக் குவித்து தட்டாஞ்சாவடியை தனது 'அரசியல் கோட்டையாக' மாற்றினார்.
காங்கிரசில் இருந்து விலகி என்.ஆர்.காங்., கட்சியை ரங்கசாமி தொடங்கியபோதும், தட்டாஞ்சாவடி மக்கள் அவர் பக்கமே நின்றனர். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அக்கட்சியின் சார்பில், போட்டியிட்ட அசோக் ஆனந்த் அமோக வெற்றி பெற்றார்.
சட்டச் சிக்கல்கள் காரணமாக அசோக் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த 2019 இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்று என்.ஆர்.காங்., கட்சிக்கு சிறு சரிவை ஏற்படுத்தினார்.
இழந்த கோட்டையை மீட்க மீண்டும் 2021 சட்டசபை தேர்தல் ரங்கசாமியே நேரடியாகக் களம் இறங்கி வெற்றி கொடியை நாட்டினார். கடந்த 2026 சட்டசபை பொதுத்தேர்தலில் ரங்கசாமி மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின், விதிமுறைப்படி தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் களம் சூடானது.
இந்த இடைத்தேர்தல் புதுச்சேரி எல்லைகளைத் தாண்டிப் பல அரசியல் காரணங்களால் உற்றுநோக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' உருவாக்கியிருந்த புதிய அரசியல் சூழலில் அக்கட்சி மட்டுமின்றி விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகளின் முழு ஆதரவுடன் காங்., களம் கண்டது. இண்டியா கூட்டணியில் இருந்த தி.மு.க., இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுமா அல்லது ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் ஒருங்கிணைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில், ரங்கசாமியின் பாரம்பரிய அரசியல் செல்வாக்கும் மக்கள் தொடர்பும் மீண்டும் நிரூபணமானது.
இடைத்தேர்தல் முடிவில், என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,388 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முதன்மை வேட்பாளரை விட 8,482 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ரங்கசாமி விட்டுச் சென்ற இடத்தை மீண்டும் பூர்த்தி செய்தார். பதிவான ஓட்டுகளில் அவர், 61.12 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்தனை புதிய கூட்டணிகளும் அரசியல் மாற்றங்களும் உருவெடுத்தாலும், தட்டாஞ்சாவடி என்றும் ரங்கசாமியின் என்.ஆர்.காங்., கோட்டை தான் என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவு மீண்டுமொருமுறை அடித்துச் சொல்லியுள்ளது.
