/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
1,400 ஆண்டு பழமையான கோவிலுக்கு விமோசனம்
/
1,400 ஆண்டு பழமையான கோவிலுக்கு விமோசனம்
ADDED : பிப் 09, 2025 06:16 AM

பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையான பராமரிப்பு மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. இதனால், கோவிலின் மகா மண்டபம், அர்த்த மண்டபம், நடராஜர் மண்டபம் உள்ளிட்டவை சேதமான நிலையில், கோவிலின் உறுதி தன்மை கேள்விக் குறியானது.
இது தொடர்பாக, தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டு அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள், பாகூர் மூலநாதர் கோவிலை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து, கோவில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கப்படும் என தெரிவித்து விட்டு சென்றனர். இதையடுத்து, கோவில் இடத்தில் கடை வைத்திருந்த வியாபாரிகள் காலி செய்யப்பட்டனர்.
அதையடுத்து, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று மதியம் கோவிலில் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டது. முதற்கட்டமாக, நடராஜர் மண்டபத்தின் வெளிப்புறத்தில் இருந்த கடைகள் இடித்து அகற்றும் பணி நடந்தது.
பக்தர்கள் நீண்ட ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

