/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்... அதிகரிக்கும்; தேர்தலை குறிவைக்கும் ஆளும்கட்சி
/
அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்... அதிகரிக்கும்; தேர்தலை குறிவைக்கும் ஆளும்கட்சி
அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்... அதிகரிக்கும்; தேர்தலை குறிவைக்கும் ஆளும்கட்சி
அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்... அதிகரிக்கும்; தேர்தலை குறிவைக்கும் ஆளும்கட்சி
ADDED : ஜன 29, 2025 07:49 AM

புதுச்சேரி: அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்த மாநில வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் வருவாயை பல மடங்காக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநில திட்ட குழுவின் கூட்டம், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான கொள்கை ஆலோசனை குழு என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், திருமுருகன், சாய்சரவணகுமார், எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.பிக்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, தலைமை செயலர் சரத் சவுகான், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநில அரசின் செலவினம், வருவாய் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த மாநில அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக பெட்ரோல், டீசல் வரிகளை உயர்த்தியது போன்று மதுபான வரிகளையும் உயர்த்துவது மட்டுமே மாநில வருமானத்தை பல மடங்காக அதிகரிக்க முடியும் என பலரும் ஆலோசனை தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா விளாசல்
மாநில வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா கடுமையாக அரசை விமர்சித்தார்.
அவர் பேசியதாவது: பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் சொன்னதை தற்பொழுது குடியரசு தின உரையில் கவர்னரும் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்று கூறி உள்ளார். இதை வரவேற்கிறோம்.
பெஸ்ட் புதுச்சேரி என்பது வார்த்தையில் மட்டும் தான் உள்ளது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுற்றுலா வளர்ச்சி, தனிநபர் வருமானம் உயர்வு போன்றவற்றால் தான் மாநிலம் வளர்ச்சிபெற முடியும். அப்போது தான் நீங்கள் சொன்ன பெஸ்ட் புதுச்சேரியை பார்க்க முடியும்.
ஆகவே, அதற்கான ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்களை வரும் நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தும் மத்திய அரசு மூலம் எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் இதுவரை கொண்டுவர முடியவில்லை. இப்போதாவது சிறப்பு நிதியை பெற்று மாநில வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்' என்றார்.
கவர்னர் கூல்
இதனை கவனமாக குறிப்பெடுத்த கவர்னர் கைலாஷ்நாதன், புதுச்சேரி வளர்ச்சிக்கான உங்களின் ஆலோசனைகளை வரவேற்கிறேன். நாம் அனைவரும் இணைந்து கண்டிப்பாக புதுச்சேரியை பிரதமர் கூறியது போல் பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம்' என்றார்.
பட்ஜெட் அதிகரிக்கிறது
கடந்த 2023-24ம் நிதியாண்டில் 11462 கோடிக்கு பட்ஜெட் தொகை செலவிடப்பட்டது. அதே நேரத்தில் நடப்பு நிதியாண்டில் 12,700 கோடிக்கு முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்திருந்தார். ஆனால் திருத்திய பட்ஜெட்டில் இது 13,235 கோடியாக அதிகரித்து, மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள சூழ்நிலையில் வாக்குறுதி அளித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி, அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் அடுத்து சட்டசபை தேர்தல் வர உள்ளதால் இப்போது முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. நான்கு மாத காலத்திற்கு மட்டுமே பட்ஜெட்டினை தாக்கல் செய்ய முடியும். இதில் பெரிதாக மக்களை கவர்ந்து ஓட்டுகளாக மாற்ற முடியாது. எனவே சட்டசபை தேர்தலை குறி வைத்து ஆளும் கட்சி பட்ஜெட் முன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக மாநில வருவாயை உயர்த்தி 15 ஆயிரம் கோடி வரை பட்ஜெட்டினை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரும் பட்ஜெட் தேர்தல் பட்ஜெட்டாக இருக்கும். அதில், பல புதிய திட்டங்களையும், சலுகைகளையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.