/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரெஞ்சு ஆட்சி காலம் முதல் உறவு பாலமாக திகழும் வர்த்தக சபை
/
பிரெஞ்சு ஆட்சி காலம் முதல் உறவு பாலமாக திகழும் வர்த்தக சபை
பிரெஞ்சு ஆட்சி காலம் முதல் உறவு பாலமாக திகழும் வர்த்தக சபை
பிரெஞ்சு ஆட்சி காலம் முதல் உறவு பாலமாக திகழும் வர்த்தக சபை
ADDED : நவ 03, 2024 05:35 AM

புதுச்சேரி சுய்ப்ரேன் வீதி முனையில் மஞ்சளும் வெள்ளையும் சங்கமித்து கம்பீரமாக ஈர்க்கும் அழகிய கட்டடத்தின் பெயர் வர்த்தக சபை. இந்த கட்டத்திற்கு பிரெஞ்சு வரலாற்றுடன் நீண்ட நெருங்கிய தொடர்பு உண்டு.
பிரெஞ்சியர்கள் வருகைக்கு பிறகு புதுச்சேரி ஏற்றுமதி, இறக்குமதியிலும் செழித்து விளங்கியது. அப்போது பிரெஞ்சியர்களுக்கு வர்த்தகத்தில் ஆலோசனை சொல்வதற்காக, 1849ல் பிப்ரவரி 13ம் தேதி வணிக ஆலோசனை சபை ஒன்றை தோற்று வித்தனர்.
இந்த அமைப்பில், ஐரோப்பியர்கள் மட்டுமின்றி இந்தியர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். பிரெஞ்சு காலத்தில் சக்தி வாய்ந்த அமைப்பாக இது இருந்தது. காப்புரிமையில் ஒரு பகுதி , துறைமுக வரி, படகு வரி என பல வருமானங்களுடன் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்த சபை, ரோமன் ரோலாண் வீதியில் உள்ள அரசு பொது நுாலக கட்டத்தில் அவ்வப்போது கூடி பிரெஞ்சு அரசுக்கு வர்த்தக வளர்ச்சிக்கு ஆலோசனை கூறி வந்த சூழ்நிலையில் 1852ல் செப்டம்பர் 7ம் தேதி வருவாய் துறை அதிகாரியை தலைவராக கொண்டு வணிக ஆலோசனை விவசாயம் மற்றும் வர்த்தக ஆணையம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் நீதிமன்ற தலைவர், பொதுப்பணித் துறை தலைவர், மருந்தக தலைவர் ஆகியோரை நிரந்தர உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வந்தது. புதுச்சேரியில் நுாற்பாலைக்கு அருகில் நவீன நெசவு ஆலை உருவாக இந்த ஆணையம் பெரும் பங்காற்றியுள்ளது.
குறிப்பாக நீல காடா துணி ஏற்றுமதியில் சிறந்த பணியை ஆற்றி வந்தது.
கடந்த 1864 செப்டம்பர் 1ம் தேதி முதல் அந்த ஆணையம், வர்த்தக சபை எனும் புது பெயரால் அழைக்கப்பட துவங்கி, அதுவே இன்று முதல் நீடித்து நிற்கிறது. பல மாநில வர்த்தகசபைகளுடன் தொடர்பு கொண்டிருந்த புதுச்சேரி வர்த்தக சபை பிரி குரான் என்ற செய்தி அறிக்கையும் வெளியிட்டு வந்துள்ளது.
அந்த காலத்து சுங்க வரி, பொருட்கள் விலை, கப்பல் போக்குவரத்து செய்திகள் அதில் வெளியிடப்பட்டு வந்துள்ளது.
வர்த்தக சபையில் கடந்த 1879ம் ஆண்டு 9 ஐரோப்பியர்கள், 6 இந்தியர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வந்தது. புதுச்சேரி இணைப்பிற்கு பிறகு 1954ல் தலைவர், துணை தலைவர், செயலர், காசாளர், ஒன்பது உறுப்பினர்கள். ஐந்தோ சீனா வங்கி இயக்குனர், கப்பல் துறை உறுப்பினர்களாக இருந்தனர்.
வர்த்தக சபை நிர்வாகிகள் தேர்தல் புதுச்சேரி நகராட்சி மேயர் தலைமையில் நடந்து வந்த சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், நிர்வாகிகள் நியமன அடிப்படையில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போது 15 நிர்வாகிகளை கொண்டு நிர்வாகித்து, இன்றைக்கும் பிரெஞ்சு காலத்தை போன்றே, புதுச்சேரி அரசுக்கும் வணிகர்களுக்கும் இடையே உறவுபாலமாக வர்த்தக சபை திகழ்ந்து வருகிறது.